தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வறட்சி அபாயம்; அதிகாரிகள் எச்சரிக்கை!

2026-ஆம் ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை வழக்கமான பாதையிலிருந்து மாறி , வட மாநிலங்களை உலுக்கி எடுத்து வருகிறது. இத்தகைய அசாதாரண காலநிலை மாற்றத்திற்குப் பின்னால், உலகையே அச்சுறுத்தி வரும், ‘எல் நினோ’ என்ற உலகளாவிய பசிபிக் பெருங்கடல் வெப்பமயமாதல் நிகழ்வு ஒளிந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

‘எல் நினோ’ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் ஒரு காலமுறை வெப்பமடைதல் நிகழ்வாகும். இது உலகளாவிய வானிலை அமைப்புகளைப் பாதிக்கிறது. இது பெரும்பாலும், சில பயிர் விளையும் பகுதிகளில் வறட்சியையும், வேறு சில பகுதிகளில் கனமழையையும் ஏற்படுத்துகிறது. இந்த சூழலில், ‘எல் நினோ’ எனும் காலநிலை மாற்றத்தின் காரணமாக பல்வேறு நாடுகள் அதிகபட்ச வெப்பம் மற்றும் அதி கனமழை காரணமாக மிகவும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன.

இந்த நிலையில், ‘எல் நினோ’ தாக்கத்தால் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அணைகள், பாசன ஏரிகளில் நீரிருப்பு குறைவதுடன், மேய்ச்சல் நிலங்கள் வறண்டு வருவதால் கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறை அபாயம் நிலவுகிறது.

2016-17-ல் ஏற்பட்ட கடுமையான வறட்சியைப் போன்ற நிலை மீண்டும் உருவாகும் அபாயம் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில், சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதுடன், சில இடங்களில் 400 அடி ஆழத்திலும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source link