மதுரை: தமிழகத்தில் 15 பல்கலைகளில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் உயர்கல்வி செயல்பாடுகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை, சிதம்பரம் அண்ணாமலை, மதுரை காமராஜ், கோவை பாரதியார், தமிழ்நாடு வேளாண், தஞ்சை தமிழ், திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார், வேலுார் திருவள்ளுவர், சென்னை கால்நடை மருத்துவ அறிவியல், டாக்டர் அம்பேத்கர் சட்டம், தமிழ்நாடு திறந்தவெளி, தமிழ்நாடு உடற்கல்வி விளையாட்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் என 15 பல்கலை.களில் தற்போது துணைவேந்தர்கள் இல்லை.
அடுத்த மாதம் காரைக்குடி அழகப்பா, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர்கள் பதவிக் காலமும் முடிவதால் இந்த காலியிடங்களின் எண்ணிக்கை 17 ஆக உயரும்.
துணைவேந்தர் மட்டுமின்றி மதுரை காமராஜ் உட்பட பெரும்பாலான பல்கலை.களில் பதிவாளர், தேர்வாணையர், முதல்வர், இயக்குநர் போன்ற முக்கிய உயர் பதவிகளும் ஓராண்டிற்கு மேலாக காலியாக உள்ளன. பல்கலை.களை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு ‘கன்வீனர்’ பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் பெரும்பாலும் சென்னையில் இருந்தே நிர்வாகம் செய்கின்றனர். உயர் பதவிகளில் பேராசிரியர்கள் கூடுதல் பொறுப்பு வகிப்பதால் ‘சீனியாரிட்டி’ பிரச்னையால் கல்விச் சூழலும் ஆரோக்கியமானதாக இல்லை. ஆராய்ச்சி பிரிவு நடவடிக்கையும் முடங்குவதாக சர்ச்சை எழுந்தள்ளது.
இதற்கு தீர்வு துணைவேந்தர்களை நியமிப்பதே. திமுக ஆட்சியில் கவர்னர், முதல்வருக்கு இடையே மோதல் போக்கு இருந்ததால் துணைவேந்தர் நியமனத்தில் முடிவு ஏற்படவில்லை. ஆனால் தற்போது முதல்வர் விஜய், கவர்னர் அர்லேகரிடையே சுமூக உறவு உள்ளது. ஆனாலும் துணைவேந்தர்கள் நியமன நடவடிக்கை பேச்சளவிலேயே உள்ளது.
பேராசிரியர்கள் கூறியதாவது:
துணைவேந்தர் நியமனம் குறித்து தவெக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குழப்பமாக உள்ளது. இதனால் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. பல்கலை.ள் வேந்தர் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை (ஜூலை 29) விசாரணைக்கு வருகிறது. இதில் தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவரும் என்றனர்.
