தமிழகம் முழுவதும் இன்றும் கனமழை; 18 மாவட்டங்களில் அதி கனமழை

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் இன்று(அக்.,23), 18 மாவட்டங்களில் அதி கனமழையும், பிற பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை கடந்த 15ம் தேதி தொடங்கியது. கடந்த எட்டு நாட்களாக, தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த பகுதிகளில் மிக கனமழையும், எதிர்பாராத வகையில் அதி கனமழையும் பெய்து வருகிறது. கடந்த 17ம் தேதி சனிக்கிழமை இரவு அப்படியொரு அதி கனமழையை, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் சந்தித்தன. இந்நிலையில், இன்றும் 18 மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

அதன் இயக்குநர் துரை அளித்த பேட்டி: தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் பகுதியில் அதிகபட்சமாக 15 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, 13; துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார், 12; காயல்பட்டினம், செட்டிகுறிச்சி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர், சுருளக்கோடு பகுதிகளில் தலா 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் மாவட்ட பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது. இதனால், தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவிழப்பதுடன், வடக்கு நோக்கி நகரவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, அடுத்து வரும் நாட்களில் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யக்கூடும்; இதற்கான, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் இன்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் தற்போது நிலவும் கனமழை சூழல், வரும் 25ம் தேதிக்கு பின் படிப்படியாக குறையும்.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது புயலாக வலுவடைந்து, மேற்கு நோக்கி நகரும் நிலையில், காற்று வீசுவதில் மாற்றம் ஏற்படும். இதனால், 26ம் தேதிக்கு பின், கனமழை குறைய வாய்ப்புள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு அதிகபட்சமாக 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Source link