தமிழக என்.ஆர்., காங். தலைவர் ஆகிறார் அருள்?

சேலம்: பாமக முன்னாள் எம்எல்ஏ அருள், சமீபத்தில் புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது, என்ஆர் காங்கிரஸ் கட்சியில் அருள் இணைவது தொடர்பாக ஆலோசனை நடந்தது.

இந்நிலையில், காமராஜர் பிறந்த நாள் மற்றும் முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழா, வரும் ஆக., 9ல் சென்னையில் நடக்க உள்ளது. அதில், தமிழக என்ஆர் காங் தலைவராக அருள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அருளிடம் கேட்டபோது, ”மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதல்வரை சந்தித்து, எதிர்கால அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தேன். அவரது கட்சியில் இணைவது குறித்து பரிசீலனை நடக்கிறது.

அதற்கு ஆதரவாளர்கள், ‘கிரீன் சிக்னல்’ கொடுத்துள்ளனர். சென்னையில் வரும் 9ல் நடக்கும் விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் நான், எனது ஆதரவாளர்களுடன் பங்கேற்பேன். என் முடிவு, அரசியல் திருப்புமுனையாக அமையும்,” என்றார்.

இதனிடையே, அருளின் நேர்முக உதவியாளர் விஜய், முகநுால் பக்கத்தில், என்ஆர் காங். கட்சியில் அருள் இணைந்ததாக பதிவிட்டுள்ளார்.

Source link