தமிழக அரசுப் பணிக்குத் திரும்பும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி, அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்படக்கூடிய முக்கிய அதிகாரிகளில் ஒருவராக பேசப்பட்டு வருகிறார். தற்போது தலைமைச் செயலாளராக உள்ள எம். சாய்குமாரின் பதவிக்காலம் 2027 பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த தலைமைச் செயலாளர் தேர்வு குறித்த ஆலோசனைகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. 33 ஆண்டுகளுக்கும் மேலான நிர்வாக அனுபவம், தேர்தல் நிர்வாகம், வருவாய், பேரிடர் மேலாண்மை, மின்வாரியம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் பணியாற்றிய அனுபவம் ஆகியவை ராஜேஷ் லக்கானியை இந்தப் போட்டியில் முன்னிலைப் படுத்துகின்றன.
6 மாதங்கள் பதவிக்காலம் நீட்டிப்பு
சட்டசபைத் தேர்தல் நடைபெற்றபோது, அப்போது தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் எம். சாய்குமார் தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பொறுப்பேற்றவுடன் சாய்குமார் மாற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் மாத இறுதியில் ஓய்வு பெறவிருந்த சாய்குமாரின் பணிக்காலத்தை மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன் மூலம் அவர்2027 பிப்ரவரி28 வரை தலைமைச் செயலாளராக தொடர வாய்ப்புள்ளது. இந்த நீட்டிப்பு நிர்வாகத் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதற்குள் அடுத்த தலைமைச் செயலாளரை தேர்வு செய்யும் பணிகளும் முக்கியத்துவம் பெறும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த தலைமைச் செயலாளர் பதவிக்கான போட்டியில் 1992-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ராஜேஷ் லக்கானியின் பெயர் முன்னணியில் பேசப்படுகிறது. தமிழகத்தில் நீண்ட காலம் பல்வேறு முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகித்த அனுபவம் அவருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராஜேஷ் லக்கானி தனது நிர்வாகப் பணியை தருமபுரி உதவி ஆட்சியராகத் தொடங்கினார். பின்னர் கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். அதன்பின் மாநகராட்சி நிர்வாக ஆணையர், சிப்காட் செயலாளர், சுற்றுலாத் துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்தார். மாவட்ட நிர்வாகம் முதல் மாநில அளவிலான கொள்கை நிர்வாகம் வரை பல்வேறு துறைகளில் அவர் பெற்ற அனுபவம் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
மேலும், 2016 முதல் 2018 வரை தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கானி, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதில் முக்கிய பங்காற்றியவர். தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர், தமிழக மின்வாரியத் தலைவர், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
தேர்தலுக்கு பின்னால் நடந்த சம்பவம்! உண்மை உடைத்த திமுக நிர்வாகி! – aandal priyadharshini
33 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பணியாற்றிய அவர், பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் நவோதயா வித்யாலயா சமிதியின்ஆணையராக பணியாற்றி வந்தார். நாடு முழுவதும் செயல்படும் நவோதயா பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் கல்விக் கொள்கை அமலாக்கத்தில் அவர் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.
ராஜேஷ் லக்கானி கோரிக்கை
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களால் மீண்டும் தமிழக அரசுப் பணிக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்த ராஜேஷ் லக்கானியின் கோரிக்கைக்கு, மத்திய அமைச்சரவை நியமனக் குழு (ACC) ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து அவர் தமிழக கேடருக்குத் திரும்ப உள்ளார். அவரது பணிக்காலம் 2029 மே 31 வரை இருப்பதால், எதிர்காலத்தில் தலைமைச் செயலாளர் பதவிக்கான முக்கியமான போட்டியாளராக அவர் பார்க்கப்படுகிறார். தற்போது சாய்குமாரின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற விவாதத்தில் ராஜேஷ் லக்கானியின் பெயர் முக்கியமாக இடம்பிடித்துள்ளது.
Source link
