எழுதியவர் : ஐஸ்வர்யா ராஜ்
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சனிக்கிழமை அன்று, தனது தோழியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற முஸ்லிம் இளைஞரை மர்ம கும்பல் ஒன்று மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம் ஈரான்; இன்னொரு பக்கம் ரஷ்யா: உக்ரைன் துறைமுகத்தில் பொழிந்த ஏவுகணை மழை… 4 இந்திய மாலுமிகள் பலி
இச்சம்பவம் தொடர்பாக அப்பெண் கொடுத்த புகாரில், தானும் தனது நண்பரும் வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத 10 முதல் 12 நபர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தன் நண்பரை அடித்து உதைக்கத் தொடங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “அவர்கள் அவரை அடிப்பதைத் தடுக்க நான் முயன்றேன், ஆனால் அவர்கள் கேட்கவில்லை. எங்களை ஆபாசமாகப் பேசி, என் நண்பரை மிகக் கொடூரமாகத் தாக்கியதோடு, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டிவிட்டுச் சென்றனர்” என்று அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
நாய் போலக் கழுத்தில் சங்கிலி கட்டி சித்திரவதை
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்களில், பாதிக்கப்பட்ட இளைஞரை ஒரு வீட்டின் முன்பாக அமரவைத்து, அவரது கழுத்தில் நாய் சங்கிலி கட்டப்பட்டு, அந்தக் கும்பல் அவரை விசாரணை செய்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி ஊடகங்களிடம் கூறுகையில், ஹரியானாவின் கர்னால் பகுதியைச் சேர்ந்த அந்த நபர் ஹரித்வாரில் வேலை பார்த்து வந்ததாகவும், அவ்வப்போது தங்கள் வீட்டிற்கு வந்து செல்பவர் என்றும் தெரிவித்தார்.
அதாவது, “சனிக்கிழமையன்று ஒரு கும்பல் கதவைத் தட்டியது, என் சகோதரி கதவைத் திறந்தார். அவர்கள் உள்ளே புகுந்து அந்த முஸ்லிம் இளைஞரை அடிக்கத் தொடங்கினர். அவருக்கு ரத்தம் வந்த பிறகும் அவர்கள் நிறுத்தவில்லை. என் சகோதரியையும் ஆபாசமாகப் பேசி, அவரை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து கழுத்தில் நாய்க் காலர் கட்டினார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
3 மணி நேரச் சித்திரவதை – காவல்துறை விசாரணை
அந்த முஸ்லிம் இளைஞரை அந்த மர்ம கும்பல் 3 மணிநேரம் சித்தரவதை செய்ததாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். “அவர் கொல்லப்பட்டிருந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? அவரை நாய் போல அடித்துள்ளனர்” என்று கூறிய அந்த பெண், மர்ம கும்பல், தனது நண்பரின் போன் மற்றும் பொருட்களைப் பறித்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து நகர வட்டார அதிகாரி சிசுபால் சிங் நேகி கூறுகையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வீடியோ ஆதாரங்களைச் சேகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
