திருநெல்வேலி: தமிழக மாணவர்களின் ஒழுக்கமும் பண்பாடும் இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என தமிழக கவர்னர் அர்லேக்கர் தெரிவித்து உள்ளார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: உங்கள் பொறுமைக்கு எனது மரியாதை. உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் வரவில்லை. அவர்கள் வந்திருந்தால் மாணவர்களின் மகிழ்ச்சியையும் திருப்தியையும் பார்த்து மகிழ்ந்திருப்பார்கள்.
பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெறும் மாணவர்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அனைவரையும் அரங்கிற்குள் அமர வைக்க முடியவில்லை. சிலர் வெளியே நின்று கொண்டிருந்ததாக தெரிவித்தனர். இதற்காக மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
வேந்தர் என்ற முறையில் அனைவருக்கும் அரங்கிற்குள் இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. அடுத்த முறை இதைவிட பெரிய அரங்கை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று துணைவேந்தரிடம் கேட்டுக் கொள்கிறேன்.மாணவர்களை எந்த காரணத்திற்காகவும் புறக்கணிக்கக் கூடாது. நீங்கள்தான் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல; நிகழ்காலமும் கூட. உங்கள் திறமை, அனுபவம், பொறுமையை புறக்கணிக்க முடியாது.
இன்று பட்டம் பெறும் மாணவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் பெருமையும் நாட்டின் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. உங்களுக்கு எந்த அறிவுரையும் வழங்க விரும்பவில்லை. நீங்களே இந்த நாட்டிற்கான மிகப்பெரிய செய்தி.
‘ஜென் சி’ தலைமுறை சிலர் இன்றைய இளைஞர்களை ‘ஜென் சி’ தலைமுறை என்று குறிப்பிடுகின்றனர். சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகளையும் பார்த்தோம். அங்கிருந்த இளைஞர்களுக்கும், இங்கு பட்டம் பெறும் மாணவர்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
உங்கள் குடும்பம், பள்ளி, பல்கலை ஆகியவை உங்களுக்கு நல்ல பண்புகளையும் கலாசாரத்தையும் கற்றுக் கொடுத்துள்ளன. தமிழகம் எப்போதும் உயர்ந்த கலாசாரத்தை நாட்டிற்கு வழங்கி வருகிறது. இன்று நீங்கள் வெளிப்படுத்திய பொறுமையும் ஒழுக்கமும் நாடு முழுவதும் பரவ வேண்டும். பல ஆண்டுகள் கடினமாக உழைத்து படித்து, தேர்வில் வெற்றி பெற்று பட்டம் பெறும் நீங்கள், வேந்தரின் கைகளால் பட்டம் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது உங்கள் உரிமை. அதில் எந்த தவறும் இல்லை.
மாணவர்களை புறக்கணிக்கும் நபராக நான் இருக்க மாட்டேன். துணைவேந்தர் என்னை அழைக்க வந்தபோது 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெறுவார்கள் என்றார். அனைவருக்கும் என் கைகளால் பட்டம் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வந்தேன். ஆனால் தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட சிறிய குறைபாடு காரணமாக அது முழுமையாக நடைபெறவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் தான் நாட்டின் பலம், ஆற்றல், எதிர்காலம். பலர் நமது கவனத்தை திசைதிருப்ப முயற்சிக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் புறந்தள்ளி நீங்கள் கல்வியில் கவனம் செலுத்தி இங்கு வந்துள்ளீர்கள். இதனால் நான் பெருமைப்படுகிறேன்.
‘விக் ஷித் பாரத்’ இலக்கு
உங்களுக்கு அறிவுரை வழங்குவதற்காக நான் வரவில்லை. இன்றைய இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காகவே இதுபோன்ற விழாக்களில் பங்கேற்கிறேன்.
நமது நாட்டின் பிரதமர் ‘விக் ஷித் பாரத்’ என்ற இலக்கை முன்வைத்துள்ளார். சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும். அந்த இலக்கை அடைய ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பு என்ன என்பதை இப்போதே சிந்திக்க வேண்டும்.
அது பிரதமரின் கனவு மட்டுமல்ல; நம் அனைவரின் கனவாக இருக்க வேண்டும். ‘விக் ஷித் பாரத்’ உருவாகும் பாதை ‘விக் ஷித் தமிழ்நாடு’ வழியாகவே செல்கிறது. எனவே முதலில் வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். அரசின் திட்டங்களை மட்டும் எதிர்பார்க்காமல், தங்களது அறிவு மற்றும் திறமையால் சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என்பதை இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.
மீண்டும் வருவேன்
மாணவர்களுடன் ஒரு நாள் முழுவதும் செலவிட வேண்டும் என்று துணைவேந்தரிடம் கூறியுள்ளேன். மேடையில் இருந்து பேசுவது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாட மீண்டும் வருவேன்.
இப்போது அனைவருக்கும் பசியாக இருக்கும். எனக்கும் பசியாகத்தான் இருக்கிறது. நீங்கள் இந்த பாதையில் தொடர்ந்து பயணியுங்கள். தமிழ்நாடு காட்டிய இந்த வழியை நாடு முழுவதும் பின்பற்றும். இவ்வாறு கவர்னர் அர்லேக்கர் பேசினார்.
