கன்னடத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘பீர்பால் டிரெயாலஜி’ படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி ‘சப்த சாகரடாச்சே எல்லோ – சைட் ஏ’ மற்றும் ‘சப்த சாகரடாச்சே எல்லோ – சைட் பி’ படம் மூலம் பிரபலமானவர் ருக்மிணி வசந்த். கன்னடத்தைத் தாண்டி இந்தி மற்றும் தெலுங்கில் தலா ஒரு படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதி நடித்த ‘ஏஸ்’ படம் மூலம் அறிமுகமாகி சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தில் நடித்திருந்தார். கடைசியாக ‘டாக்ஸிக்’ படம் இவர் நடிப்பில் வெளியாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் – பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் ‘டிராகன்’ மற்றும் மலையாளத்தில் நிவின் பாலியின் 51வது படம் எனக் கைவசம் வைத்துள்ளார். இதில் நிவின் பாலி படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார். இதைத்தவிர்த்து கன்னடத்தில் ‘மங்கள கௌரி’ எனும் படத்தை வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் நடிக்கும் புதுப்பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழில் முதல் முறையாக லீட் ரோலில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தெலுங்கில் ‘கணம்’ படத்தை இயக்கிய ஸ்ரீ கார்த்திக் இயக்குகிறார். இவரோடு இணைந்து விநாயக் வைத்தியநாதன் கதை எழுதியுள்ளார். மேட் பாய்ஸ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சிறுனி சினி கார்பிரேஷன் தயாரிக்கிறது. இதில் ருக்மிணி வசந்தோடு இயக்குநர் ஸ்ரீகார்த்திக் தயாரிப்பாளர் தேவ் ராம்னாத் மற்றும் கதையாசிரியர் விநாயக் வைத்தியநாதனும் நடிக்கின்றனர். அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். ரோட் ட்ரிப் கதைக்களத்தில் இப்படம் உருவாகுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
