தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடங்கப்பட்டதன் நினைவாக விஜயதசமி பண்டிகையை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆண்டுதோறும் ஊர்வலம் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் கடந்த 18ஆம் தேதி அல்லது 25ஆம் தேதி அல்லது நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஊர்வலம் நடத்த அனுமதிக்கக் கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தரப்பில் டிஜிபியிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த விண்ணப்பம் தொடர்பாக காவல்துறை தரப்பில் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனால், இந்த ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநில செயலாளர் ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, வடமாவட்டங்களில் அக்டோபர் 25ஆம் தேதியும் தென் மாவட்டங்களில் நவம்பர் 1ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்த அனுமதி தரப்படுவதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 58 இடங்களில் அனுமதி அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காவல்துறையின் முடிவை ஏற்று, தமிழ்நாட்டில் 128 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி நடத்திக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் அனுமதி அளித்து உத்தரவை வழங்கினார். அதன்படி அக்டோபர் 25ஆம் மற்றும் நவம்பர் 1ஆம் தேதிகளில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (25-10-26) சென்னை, புதுச்சேரி தஞ்சாவூர், நீலகிரி, சேலம், திருப்பூர், நாமக்கல், விழுப்புரம், கோவை, திருச்சி, தருமபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.