“தமிழ்நாட்டின் உரிமையை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளார்”

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ், “காவேரி நீர் தகராறு தொடர்பாக 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, மேல் படுகை மாநிலமான கர்நாடகா, காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவதற்குக் கீழ் படுகை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதை மத்திய அரசு அறிந்துள்ளதா?. முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்திற்குக் கீழ் படுகை மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெற்றுள்ளதா?. ஆம் எனில், அதன் விவரங்கள் என்ன?. 

மத்திய அரசின் முன் உள்ள இத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? என ஜலசக்தி துறை அமைச்சருக்குக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஜல்சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி அளித்த பதிலில், “காவேரி நீர் தகராறு தொடர்பாக 16.02.2018 அன்று வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவதற்குத் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய இதர கீழ் படுகை மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா மாநிலம் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

உச்ச நீதிமன்றம் தனது 16.2.2018 தேதியிட்ட உத்தரவில், காவேரி நீர் தகராறு தீர்ப்பாயத்தின் 2007ஆம் ஆண்டு தீர்ப்பின் பிரிவு 18ஐ (XVIII) பொருத்தமானது எனக் கண்டறிந்து, “இந்த தீர்ப்பாயத்தின் உத்தரவில் உள்ள எதுவும், எந்தவொரு மாநிலமும் அதன் எல்லைக்குள் நீரின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கோ, அந்த மாநிலத்திற்குள் உள்ள நீரின் பலனைத் தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு முரணில்லாத வகையில் அனுபவிப்பதற்கோ உள்ள உரிமை, அதிகாரம் அல்லது அதிகார வரம்பைப் பாதிக்காது” என்று தனது உத்தரவில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கர்நாடகா அரசால் 2019இல் சமர்ப்பிக்கப்பட்ட மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை, காவேரி நீர் தகராறு தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மற்றும் தற்போதைய மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கோரி, திட்ட அதிகார அமைப்பிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இது தொடர்பாகத் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. டெல்லி எஜமானர்களைப் பகைத்துக் கொள்ளாமலும் – ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்றக்  காங்கிரஸுக்கு எதிராகப் பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.

இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டுமெனச் சட்டப்பேரவையில் பேசி இருந்தேன். கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த ஃசோபா மாடல் முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை – விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.  இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேகதாதுவில் அணைக் கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Source link