தமிழ்நாட்டில் பாரம்பரிய மற்றும் விரைவு விளையாட்டான கோ-கோ (Kho-Kho) விளையாட்டு முற்றிலும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், போலி சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் போட்டிகளில் முறைகேடுகள் நடப்பதாகவும் தமிழ்நாடு கோ-கோ சங்கத்தின் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மூத்த பயிற்சியாளர் மனு அளித்தார்.
கோவை மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு கோ-கோ சங்கத்தின் மூத்த பயிற்சியாளர் முருகவேல், விளையாட்டுத் துறை மற்றும் எஸ்.டி.ஏ.டி (SDAT) அமைப்பில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளைச் சுட்டிக்காட்டினார்.
2001-ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வரும் முருகவேல், “ஏழை எளிய மாணவர்கள் விளையாடும் இந்த கோ-கோ விளையாட்டு, போதிய அங்கீகாரம் மற்றும் ஆதரவு இல்லாமல் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. 2019-ஆம் ஆண்டு மூப்புநிலை அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் முறையாகப் பதிவு செய்து சங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால், எஸ்.டி.ஏ.டி (SDAT) இதற்கு முறையான அங்கீகாரம் வழங்க மறுத்து வருகிறது” எனக் குற்றம் சாட்டினார்.
மேலும் தொடர்ந்த முருகவேல், “போட்டிகளையே நடத்தாமல் போலி சான்றிதழ்கள் (Fake Certificates) தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவிலான போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி, தகுதியற்ற நபர்கள் விளையாட்டு ஒதுக்கீட்டின் (Sports Quota) கீழ் அண்ணா பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். ஆனால், தேசிய அளவில் விளையாடி சாதனை படைத்த பல உண்மையான வீரர்களுக்கு எந்தவித வேலையோ, அங்கீகாரமோ கிடைக்காமல், வாழ்வாதாரத்திற்காக உணவளிப்புப் பிரிவு (Zomato) மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பணிபுரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது,” என்று கூறினார்.
முக்கியமாக, நடைபெறும் முதலமைச்சர் கோப்பை (CM Trophy) போட்டிகளிலும் நடுவர்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக விசிலடித்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவு, விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்குப் பல்வேறு மனுக்கள் அளித்தும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்றும் முருகவேல் வேதனை தெரிவித்தார்.
பாரம்பரியமிக்க கோ-கோ விளையாட்டைக் காப்பாற்றவும், தகுதியான ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், தமிழக அரசு மற்றும் விளையாட்டுத் துறை உடனே தலையிட்டு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.
