தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழா
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான அர்லேக்கர் பங்கேற்று, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் தங்கப் பதக்கங்களையும் வழங்குகிறார்.
அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்துள்ளார். அதேபோல இன்று முனைவர் பட்டம் பெற இருந்த மகேஷ்குமார் அகர்வாலும் விழாவில் பங்கேற்கவில்லை.
அமைச்சர் நிர்மல் குமார்
இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படுவது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:
* தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவதை அனுமதிக்க முடியாது.
* தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் தரப்பில் பல வழிகாட்டுதல்களை கொடுத்து வருகிறார்கள். அது ஏற்புடையதல்ல.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்
* தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும்.
* பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில பாடல்களே முதலில் பாடப்படுகிறது.
* தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவது தவறான விஷயம்.
* தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
