”தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளே… நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம்…” – ராகுல்காந்தி உருக்கம்

கடந்த சில தினங்களாகத் தமிழகம் முழுவதும் பரவலான இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதில், பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பேரிடர் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதே நேரத்தில், இந்த கனமழையால் பல்வேறு இடங்களில் பொது மக்கள் வசிக்கும் வீடுகளும் இடைந்து விழுந்துள்ளன. இது போன்ற சம்பவங்களால் போது மக்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.  

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனத் தனது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், ”தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை எண்ணி மிகுந்த கவலை கொள்கிறேன். 

காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களைச் சென்றடைந்து, அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுங்கள். குறிப்பாக,  முதியவர்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள்.  தமிழ்நாட்டில் உள்ள என் சகோதர சகோதரிகளே! நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம். பாதுகாப்பாக இருங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.