ஒரு முன்னோடித் திட்டமாக (pilot project) இந்தியாவில் 12 மாநிலங்களில் (காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, மேகாலயா, சிக்கிம், அசாம், உத்தரப்பிரதேசம், கேரளம், தமிழ்நாடு, கர்நாடகா) சிவில் டிபென்ஸ் நெட்வொர்க் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். இந்த 12 மாநிலங்களிலும் முதல் கட்டமாக 60 ,000 பேர் நியமிக்கப்படுவார்கள்.
இவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஐம்பது பயிற்றுனர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்தப் பயிற்றுநர்கள் ராணுவ அதிகாரிகளைக் கொண்டு நவீன ராணுவ உத்திகள் ட்ரோன்கள் இயக்கம் உள்ளிட்ட பயிற்சிகளை அளிப்பர்.
60,000 இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி
நாட்டுக்கு ஏற்படும் வான்வழி அச்சுறுத்தல் உட்பட அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பணியாற்றுதல், தகவல் தொடர்பு, முக்கியமான அரசுக் கட்டமைப்புகளை பாதுகாப்பது, மக்களுடன் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு, அவசர காலச் சேவை, குடிமைச்சமூகம் ராணுவம் ஒருங்கிணைப்பு என மிக முக்கியமான பணிகளை 60,000 இளைஞர்கள் மேற்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதற்கு தகுதியானவர்களாகவும் இவர்கள் உருவாக்கப்படுவார்கள் என மோடி அறிவித்திருக்கிறார்.தொண்டர் படை என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அடிப்படையில் ஒரு துணை இராணுவத்தை போலவே உருவாக்கப்படுகிறது.
இப்போது உருவாக்க வேண்டிய தேவை என்ன?
இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் காவல்துறை மிகப்பெரும் எண்ணிக்கையில் வளர்க்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு ராணுவம் குறிப்பான எல்லைகளைக் கண்காணிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் இந்தோ திபேத்தான் எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட ஏராளமான துணை ராணுவப் படைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அவசர காலங்களிலும் பேரிடர் காலங்களிலும் மக்களை மீட்பதற்கும் காப்பதற்கும் ஒன்றிய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் பேரிடர் மீட்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1947 லேயே காவல்துறைக்கு உதவியாக ஊர்காவல் படை என்றொரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. இப்போது 60,000 இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்க வேண்டிய தேவை என்ன என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு சட்டப்பூர்வ அனுமதியா ?
பசுவதைத் தடைச் சட்டம் அமலில் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் கெள ரக்க்ஷக் (பசுக் காவலர்கள்) ஸ்ரீ ராம் சேனா, பஜ்ரங்தள் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள், இத்தகைய தொண்டர் படைகளுக்கு சட்டப்பூர்வ தகுதி வழங்கி அவர்களின் எல்லா செயல்களையும் நியாயப்படுத்துவதற்காகவே இந்தக் குடிமைப் பாதுகாப்பு வலைப் பின்னல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்று விமர்சிக்கின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு கலைக்கப்பட்ட ஜூடும் அமைப்பு
மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு சல்வா ஜூடும் (அமைதிப்படை) என்ற பெயரில் மக்களின் ஒரு பிரிவினரை ஆயுதபாணியாக்கி மக்களுக்கு எதிராக மோத விட்டதை வட இந்தியாவில் காண முடியும் என்று ஓய்வு பெற்ற காவல் அதிகரி தனபதி தெரிவித்துள்ளார். இந்த சல்வா ஜுடும் என்ற சட்ட விரோதக் குண்டர் படை முழுக்க முழுக்க பெரு முதலாளிகளால் ஊட்டி வளர்க்கப்பட்டது என்பது அம்பலமாகியது. செல்வா ஜூடும் என்ற இந்த ஆயுதம் தாங்கிய அமைப்பு சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகே அது கலைக்கப்பட்டது.
போராடும் மக்களை ஒடுக்க ராணுவப் பயிற்சியா?
மத்திய அரசின் தொண்டர் படைக்கு எப்படி ஆள் சேர்க்கப் போகிறார்கள் என்பதற்கான விதிமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்றுனர்களுக்கு ராணுவம் பயிற்சி அளிக்கும் என்பது மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும் நீதிக்காகவும் போராடும் மக்களை ஒடுக்கும் இத்தகைய படையை தொடக்கத்திலேயே எதிர்த்து முறியடிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சிவில் டிபெண்ஸ் நெட்வொர்க்கை எதிர்த்து அரசியல் கட்சிகள் ஜனநாயக இயக்கங்கள் குரல் கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
