Indian Railways Night Charging Rules,தூங்கும் போது சார்ஜ் போட முடியாது: ரயில் பயணிகளுக்கு புது ரூல்ஸ் – கவனம் தேவை – indian railways phone charging rules timings safety tips for passengers

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ரயிலில் பயணம் செய்யும்போது உங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் சார்ஜிங் தொடர்பான ரயில்வே விதிமுறைகள் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். விதிமுறைப்படி, இரவு 11 மணிக்கு மேல் பேட்டரி தீர்ந்துவிட்டால் அதை சார்ஜ் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ரயில் பயணத்தின்போது பலர் திரைப்படங்களைப் பார்ப்பதிலோ அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதிலோ நேரத்தைச் செலவிடுகிறார்கள். இதனால் மொபைல் பேட்டரி விரைவாகத் தீர்ந்துவிடும்.

ஆனால், இனி நீங்கள் உங்கள் மொபைல் பேட்டரியைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், ரயில்வே நிர்வாகம் இதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது. புதிய அறிவுறுத்தல்களின்படி, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்டுகள் அணைத்து வைக்கப்படும். அதாவது, இந்த ஆறு மணி நேரத்திற்கு ரயில்களில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி கிடைக்காது.

பவர் பேங்க் வெடித்ததால் நடவடிக்கை!

சமீபத்தில், தென்கிழக்கு ரயில்வே (South Eastern Railway) ரயில் பெட்டி ஒன்றில் சார்ஜ் செய்துகொண்டிருந்த பயணியின் பவர் பேங்க் ஒன்று அதிக வெப்பமடைந்ததால் திடீரென வெடித்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், ரயில்வே நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கியுள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அனைத்து சார்ஜிங் பாயிண்டுகளையும் அணைத்து வைக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இது புதிய விதிமுறை அல்ல!

ரயில்வே வாரியம் முதன்முதலில் 2014ஆம் ஆண்டின் ஜூன் மாதம், இரவு நேரத்தில் சார்ஜ் செய்வதைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, 2021 மார்ச் மாதம் ரயில்களில் தீ விபத்துகள் ஏற்பட்ட சில சம்பவங்களைத் தொடர்ந்து இந்த விதிமுறை கடுமையாக்கப்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் இதில் தளர்வு ஏற்பட்டது. தற்போது, ​​பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த விதிமுறை மீண்டும் முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறது.

எனவே, இனி ரயில் நிலையத்திற்குச் செல்வதற்கு முன்போ அல்லது ரயிலில் ஏறுவதற்கு முன்போ, உங்கள் மொபைல் மற்றும் பவர் பேங்க்கை முழுமையாக சார்ஜ் செய்துகொண்டு வீட்டிலிருந்து கிளம்புவது நல்லது. இரவு நேரத்தில் சார்ஜ் போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தால் அதில் சிக்கல் ஏற்படும்.

இரவு நேரப் பயணங்களின்போது ரயில் ​​பயணிகள் மின்சாரக் கோளாறை உடனடியாகக் கவனிக்க முடியாமல் போகலாம் என்பதால், பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்தக் கட்டுப்பாட்டின் நோக்கமாகும். எனவே பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால் உதவியாக இருக்கும். கட்டுப்பாட்டு நேரம் தொடங்குவதற்கு முன்பு போன், லேப்டாப், பவர் பேங்க் போன்ற சாதனங்களை சார்ஜ் செய்துகொண்டால் பின்னர் ஏற்படக்கூடிய தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்கலாம்.

Source link