தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கங்கள் மற்றும் திரையரங்க, விநியோகஸ்தர்கள் சங்கங்கள் இடையே ஓடிடி வெளியீடு தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது. அதாவது ஒரு படம் திரையரங்கில் வெளியானால் 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடி-யில் வெளியாவதை 8 வாரங்களுக்கு அதிகரிக்க வேண்டும் என திரையரங்க மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் படங்கள் திரையிடப்போவதில்லை என ஒரு அதிரடி முடிவை எடுத்தனர்.
இந்த முடிவை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்த்தனர். மேலும் பதிலுக்கு செப்டம்பர் 1 முதல் வேலை நிறுத்த போராட்டத்தையும் அறிவித்தனர். அதோடு இந்த பிரச்சனையை தமிழ்நாடு முதல்வருக்கும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கும் கொண்டு சென்று தீர்வு காண இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இதனால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்பு தயாரிப்பாளர் சங்கங்களின் முடிவை மறுபரிசீலனை பன்னுமாறு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து திரையரங்கு மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தங்களது படங்கள் திரையிடப்போவதில்லை என்ற முடிவை பின்வாங்கியதாக தெரிவித்தார். பின்பு தயாரிப்பாளர் சங்கங்களும் தாங்கள் அறிவித்த வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்திவைத்தது. அப்போது அமைச்சர் ராஜ் மோகனிடம் பிரச்சனை குறித்து மனு கொடுத்துள்ளதாகவும் அவர் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவரின் வழிகாட்டுதலோடு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கங்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர சங்கத் தலைவர் ஜி.தமிழ் குமரன், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் டிஜி தியாகராஜன், செயலாளர் சிவா, பொருளாளர் தனஞ்செயன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது முக்கிய பிரச்சனையாக இருக்கும் 8 வார ஓடிடி வெளியீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு அடுத்த மாதம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இதனை நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்துகொண்டார். மேலும் காலை 6 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வேண்டி கோரிக்கை வைத்துள்ளதாகவும் அந்த கோரிக்கையையும் அமைச்சர் பரிசீலிக்க உறுதியளித்ததாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போது காலை 9 மணி சிறப்பு காட்சியே நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
