துாத்துக்குடி: “அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்களை, தரக்குறைவாக விமர்சிப்பது தான் த.வெ.க.,வின் பெண்கள் பாதுகாப்பா?” என தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., கேள்வி எழுப்பி உள்ளார்.
துாத்துக்குடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பருவமழையை எதிர்கொள்ள, எந்தவித முன்னேற்பாடுகளையும், த.வெ.க., அரசு செய்ததாக தெரியவில்லை. சென்னையில், சிறிதளவு மழை பெய்ததற்கே, பல இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில், மக்கள் பிரதிநிதிகளை தவிர்த்து விட்டு, அதிகாரிகளே பணியாற்ற வேண்டும் என்று நினைத்தால், அது நிச்சயமாக மக்களுக்குப் பயனளிக்காது.
யாருக்கும் பயப்படாமல், மக்கள் பிரதிநிதிகளும், மக்களுக்காகப் பணியாற்றுபவர்கள்தான் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். ஆட்சி மாறிவிட்டது என மக்களுக்கு எதிராக, அதிகாரிகள் செயல்படக்கூடாது.
தங்களுக்கு எதிராக, சமூகவலை தளங்களில் பதிவிடும், எதிர்த்து செயல்படும் பெண்களை குறி வைத்து, த.வெ.க.,வினர், மிகவும் தரக்குறைவான பதிவுகளை, சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பெண்களை மதிப்பதாகவும், பாதுகாப்பதாகவும் கூறிக்கொள்ளும் த.வெ.க.,வினரின் லட்சணம் இதுதானா?.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ., சரவணன் மீது, பல புகார்கள் வந்தாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதான். துாய ஆட்சி என சொல்லிக்கொள்ளும் இந்த ஆட்சியின் லட்சணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
