தர்மேந்திர பிரதானின் விலகல்: ஒடிசா, சத்தீஸ்கர் மாநில அமைச்சர்கள் ராஜினாமா செய்ய கோரிக்கைகள் தீவிரம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களைத் தொடர்ந்து, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது மாநிலக் கல்வி அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளனர்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சொந்த மாநிலமான ஒடிசாவில், பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி, மாநிலப் பள்ளி மற்றும் வெகுஜனக் கல்வித் துறை அமைச்சர் நித்யானந்த கோண்டிற்கு எதிராக பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக், நமது மாநில மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களில் ஏராளமான பிழைகள் உள்ளன. அமைச்சர் நித்யானந்த கோண்ட், தர்மேந்திர பிரதானைப் முன்மாதிரியாகக் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், பிஜேடி கட்சி கடந்த சில வாரங்களாகவே இக்கோரிக்கையை முன்வைத்து வருவதாகக் கூறிய அவர், மாநிலம் தழுவிய போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேபோல, ஒடிசா பிரதேச காங்கிரஸ் கமிட்டி, அமைச்சர் நித்யானந்த கோண்ட் ராஜினாமா செய்யாவிட்டால் ‘ஒடிசா பந்த்’ நடத்தப்படும் என 7 நாட்கள் கெடு விதித்துள்ளது.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான 55 பாடப்புத்தகங்களில், தகவல் தவறுகள், இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகள் மற்றும் தவறான குறிப்புகள் என மொத்தம் 1,678 பிழைகள் கண்டறியப்பட்டதை அடுத்து இச்சச்சை வெடித்தது. இதில் 8-ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் மட்டும் அதிகபட்சமாக 705 பிழைகள் இருந்தன.

அவற்றில் சில முக்கியப் பிழைகள், ஒடிசாவில் உள்ள ‘நியம்கிரி குன்றுகள்’ ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஒடிசா சட்டமன்றக் கட்டடத்திற்குப்’ பதிலாகக் கர்நாடகச் சட்டமன்றக் கட்டடப் படம் இடம்பெற்றுள்ளது. புகழ்பெற்ற விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் ஒரு “சிறந்த விமானி” (Great Pilot) எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். கர்நாடகாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஹம்பி’ தளம், கொனார்க் சூரியனார் கோயில் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பிரச்னையைத் தொடர்ந்து, SCERT இயக்குநர் உள்ளிட்ட 4 மூத்த அதிகாரிகளை ஒடிசா அரசு முதலில் சஸ்பெண்ட் செய்தது. பின்னர், இதில் பெரிய சதி இருப்பதாகக் கூறி முதலமைச்சர் மோகன் சரண் மாஜி குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, அறிவியல், புவியியல் மற்றும் உண்மைத் தன்மையைச் சரிபார்க்காமல் பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் அளித்து, அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.175 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கூறி, குற்றச்சதி மற்றும் அலட்சியக் குற்றச்சாட்டின்கீழ் முன்னாள் எஸ்சிஇஆர்டி இயக்குநர் மனோஜ் குமார் பாதியை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ லக்ஷ்மன் முண்டா, பிஜேடி தனது ஆட்சிக்காலத்தில் பல முறைகேடுகளைச் செய்ததாகவும், அப்போது எந்த அமைச்சரின் ராஜினாமாவையும் கோரவில்லை என்றும் சாடியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில், பள்ளித் கல்வித் துறை அமைச்சர் கஜேந்திர யாதவ் ராஜினாமா செய்ய வேண்டும், நீட் தேர்வெழுதி தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் கல்வி அமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற ஆராய்ச்சி மாணவி சோனம் பன்சோட் கூறும்போது, தர்மேந்திர பிரதானின் ராஜினாமா என்ற எங்களின் முக்கியக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுவிட்டது. நீட் வினாத்தாள் கசிவுக்குப் பின் நடந்த மறுதேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட ஜெகத்பூரைச் சேர்ந்த 20 வயது மாணவி ஹரிகா ராவ் நாயுடுவின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது எங்களது இரண்டாவது கோரிக்கை. மூன்றாவதாக, தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறிய மாநிலக் கல்வி அமைச்சர் கஜேந்திர யாதவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த 12-ஆம் வகுப்பு இந்தி வினாத்தாள் கசிவு குறித்தும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

காங்கிரஸ் இளைஞரணியும் இந்தப் போராட்டத்தில் இணைந்து அமைச்சர் கஜேந்திர யாதவின் ராஜினாமாவை வலியுறுத்தியது. இதுகுறித்து சத்தீஸ்கர் மாநிலக் காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் சுஷீல் ஆனந்த் சுக்லா கூறுகையில், கடந்த 2.5 ஆண்டுகளில் மாநிலத்தில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பத் தவறியதாலும், இவரது பதவிக் காலத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதாலும் கஜேந்திர யாதவ் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது என்றார்.

காங்கிரஸுக்குப் பதிலடி கொடுத்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் கேதார் குப்தா, முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலும், கல்வி அமைச்சரின் தலைமையிலும் சத்தீஸ்கரின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது; காங்கிரஸ் ஆட்சியை விட தற்போதைய தேர்வு முடிவுகள் சிறப்பாக உள்ளன என்றார். மேலும், கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அவர், நியாயமான போராட்டங்களை வரவேற்பதாகவும், ஆனால் காங்கிரஸ் கட்சி மாணவர்களை வைத்து அரசியல் லாபம் தேடப் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Source link