தர்மேந்திர பிரதான் ராஜினாமா: புதிய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்கிறார் பிரலஹாத் ஜோஷி

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ நடத்திய தீவிரப் போராட்டங்களைத் தொடர்ந்து, தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷிக்கு அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாகக் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

64 வயதான பிரல்ஹாத் ஜோஷி, கர்நாடகாவின் தார்வாட் மக்களவைத் தொகுதியில் இருந்து 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். இவர் 2019 முதல் 2024 வரை நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய அரசியல் சாசனத்தின் 75(2) பிரிவின்படி, பிரதமரின் பரிந்துரையை ஏற்று, மத்திய அமைச்சரவையில் இருந்து தர்மேந்திர பிரதான் சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தை இந்திய குடியரசுத் தலைவர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், பிரதமரின் ஆலோசனையின் பேரில், கேபினட் அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷிக்கு தற்பொழுது வகித்து வரும் இலாகாவுடன் கூடுதலாகக் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பையும் வழங்கி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்குப் பிறகு, மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், தர்மேந்திர பிரதான் பல தசாப்த காலச் சிறப்புமிக்க அரசியல் வரலாற்றைக் கொண்டவர். நாட்டின் வளர்ச்சிக்காக அவரின் பங்களிப்பு என்றும் நினைவு கூரப்படும். அவரது ஆட்சிக்காலத்தில் தேசிய கல்விக்கொள்கை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதுடன், கல்வித்துறையில் 100-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டின் பெரிய நலனைக் கருத்தில் கொண்டு அவர் பதவி விலகிய முடிவானது, நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றும் பங்களிப்பை எந்த வகையிலும் தடுத்துவிடாது. நாட்டின் வளர்ச்சிப் பாதையில் நமது பயணங்கள் மீண்டும் இணையத்தான் போகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு குறித்த அறிவிப்பு வெளியானபோது, பிரல்ஹாத் ஜோஷி தனது சொந்தத் தொகுதியில் இருந்தார். வெள்ளிக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, அவர் கர்நாடகாவில் உள்ள தனது தொகுதிக்குச் சென்றிருந்தார். திங்கள்கிழமைதான் அவர் டெல்லி திரும்புவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், சனிக்கிழமை தனது தொகுதியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது, அவருக்கு டெல்லியிலிருந்து அவசர அழைப்பு வந்தது. அதனையடுத்து, இரவு 7:30 மணிக்கு ஹூப்ளி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, நள்ளிரவில் அவர் தேசியத் தலைநகர் டெல்லியை வந்தடைந்தார்.

பிரல்ஹாத் ஜோஷி தனது அரசியல் பயணத்தைத் தார்வாட் மாவட்டத்தில் தொடங்கினார். 1995 முதல் 1998 வரை பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவராகவும், 1998 முதல் 2003 வரை அதே மாவட்டத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். 2004-ம் ஆண்டில் முதன்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, 16-வது மக்களவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான நிலைக்குழுவின் தலைவராகச் செயல்பட்டார். மேலும், கர்நாடக மாநில பா.ஜ.க தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார்.

உணவுத்துறை அமைச்சராக, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் இயங்கும் உலகின் மிகப்பெரிய நலத்திட்டமான ‘பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தை நிர்வகித்து வருகிறார். மேலும், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சராக, மோடி அரசின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றான ‘பிஎம் சூர்ய கர் யோஜனா’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பொறுப்பேற்றுள்ளார். கர்நாடகாவில் தொடக்க பள்ளிகளுக்கான மதிய உணவுத் திட்டத்துடனும் இவர் தொடர்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link