தலைநகரமா, கொலைநகரமா? சென்னையில் ஓட ஓட விரட்டி நடந்த படுகொலை: தவெக அரசை விளாசிய கனிமொழி MP! – chennai double murder news live updates kanimozhi tweets on tn law and order failure

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது; முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முற்றிலும் செயலிழந்து கிடக்கிறது என்று ஆளும் தவெக அரசை நோக்கி மிகக் கடுமையான அஸ்திரத்தைத் தொடுத்துள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. தலைநகர் சென்னையின் மையப்பகுதியில் 24 மணி நேரத்திற்குள் அரங்கேறியுள்ள இரண்டு கொடூரக் கொலைச் சம்பவங்கள், சென்னை பாதுகாப்பான நகரம் தானா என்ற அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் விதைத்துள்ளது.

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை:

சென்னை அடையாறு – பெசன்ட் நகர் பகுதியில் நேற்று இரவு நடந்த சம்பவம் ஏதோ சினிமா காட்சியைப் போலப் பார்ப்போரைக் குலைநடுங்க வைத்துள்ளது. அடையாறைச் சேர்ந்த 45 வயதான கண்ணன் என்ற நபர், அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ஒரு கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கண்ணன் அலறியடித்துக் கொண்டு நடுரோட்டில் ஓடியபோதும், இரக்கமின்றி விரட்டிச் சென்ற அந்தக் கும்பல், பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பியோடியது. இரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

காவல்துறை பதிவேட்டின்படி, கொல்லப்பட்ட கண்ணன் ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி (History Sheeter) என்பதும், அண்மையில் தான் அவர் ஆளும் கட்சியான ‘தமிழக வெற்றி கழகத்தில்’ (TVK) இணைந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே அவர் ஆளுங்கட்சியில் தஞ்சமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த பழிக்குப்பழி கொலை அரங்கேறியுள்ளது.

போதை கும்பலின் வெறி ஆட்டம்: வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், ராயபுரம் பகுதியில் மற்றொரு கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் கஞ்சா மற்றும் போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து வந்த நிலையில், அங்கு தங்கி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளி ஒருவர், போதை கும்பலின் அட்டகாசத்தைத் தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் போதை கும்பல், சுத்தியல் மற்றும் பீர் பாட்டில்களால் அந்தத் தொழிலாளியைத் மிருகத்தனமாக அடித்துக் கொலை செய்துள்ளது. தலைநகரில் போதைப்பொருள் புழக்கமும், ரவுடிகளின் அராஜகமும் எந்த அளவிற்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சியாக மாறியுள்ளது.

“காவல்துறை செயலிழந்துவிட்டது” – கனிமொழியின் அனல் பறக்கும் ட்வீட்:

சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்கவிருக்கும் வேளையில், இந்த இரட்டைக் கொலைகள் தவெக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இதனைத் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையாகச் சாடியுள்ள கனிமொழி MP:

தலைநகர் சென்னையின் மையப்பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நபர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதோடு, அண்மையில் தவெகவில் இணைந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரும் போதை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா என்று எண்ணும் அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டதற்கும், தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இதுவே சாட்சி.

கனிமொழியின் இந்த ட்வீட் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகரே நடுரோட்டில் கொல்லப்படும் அளவிற்குச் சென்னையில் சட்டம் – ஒழுங்கு மோசமடைந்துள்ளதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

போலீசாரின் அதிரடி நடவடிக்கை:

விபரீதத்தை உணர்ந்த சென்னை மாநகரக் காவல்துறை, சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் தனிப்படைகள் அமைத்துத் தீவிர வேட்டையில் இறங்கியது. அடையாறு கொலை வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளைப் போலீசார் சில மணி நேரங்களிலேயே அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இருப்பினும், “குற்றவாளிகளைக் கைது செய்வது மட்டுமே தீர்வாகாது; குற்றங்கள் நடப்பதற்கு முன்பே தடுக்கும் உளவுத்துறையும், காவல்துறையும் ஏன் முடங்கிக் கிடக்கின்றன?” என்ற கனிமொழியின் கேள்விக்குத் தவெக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source link