கடந்த தி.மு.க ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், 117 தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. தனியார் பள்ளி சங்கத்தின் தலைவர் டி.சி. இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூன் 27, 2026 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்குச் சொந்தமான சென்னை மற்றும் திருச்சி இல்லங்கள் உட்பட 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், இது தொடர்பாக அவரிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாகப் போலீஸார் தீவிர விசாரணையும் நடத்தினர். அதனைத் தொடர்ந்து அன்பில் மகேஷை நேரில் அழைத்தும் விசாரணை நடத்தினர். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்த ஊழல் புகாரில் சட்டவிரோதமாக நடைபெற்ற பணபரிவர்த்தனைகள் தொடர்பாகவும் அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகின்றன.
இந்த சூழலில் இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வேண்டும் அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், ‘இந்த வழக்கில் போலீஸின் சம்மனை ஏற்று செப்டம்பர் 18 ஆம் தேதி அன்பில் மகேஷ் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அப்போது, 240 கேள்வி எழுப்பப்பட்டு சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். அதுமட்டுமல்லாமல் திருச்சி மற்றும் சென்னையில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய போலீசார், அங்குள்ள ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இப்போது 10 ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொண்டு இதுவரைக்கும் 7 ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை அவர் சமர்பித்திருக்கிறார். இந்த வழக்கை பொறுத்தவரைக்கும் அன்பில் மகேஷ் சாட்சியை கலைக்க மாட்டார், எங்கும் தப்பிச் செல்லமாட்டார். அவர் எப்போது வேண்டுமானாலும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறார். அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கிறார்கள். எனவே, அதனை பரிசீலித்து அன்பில் மகேஷுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாதிட்டார்.
இதையடுத்து காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஜான் சத்யன், ‘இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் என்பவர் தலைமறைவாக இருக்கிறார். இந்த குற்றச்சாட்டுகள் மிக தீவிரமானவை. இதில் 400 கோடி ரூபாய் வரைக்கும் வசூலிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. இந்த சூழலில் அன்பில் மகேஷுக்கு முன் ஜாமீன் வழங்கினால் எதுவும் வெளியே வராது. அதனால் அவரை காவலில் விசாரிக்க வேண்டியுள்ளது. அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது’ என வாதித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி லட்சுமி நாராயணன் இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான முத்துக்குமார், பாதுகாப்பாக இருப்பதாகவும், சரியான நேரத்தில் அவர் திரும்பி வருவார் என்றும் அன்பில் மகேஷ் உறுதியளித்ததாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணனிடம் மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறை தெரிவித்துள்ளது.
அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவுக்குப் பதிலளிக்கும் வகையில், நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல் உதவி ஆணையர் ஒருவர் தாக்கல் செய்த பதில் மனுவில், “இரண்டாவது குற்றவாளியான முத்துக்குமாரின் உறவினர்கள், அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து மனுதாரரான அன்பில் மகேஷை அணுகியுள்ளனர்; அதற்கு, அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், தகுந்த நேரத்தில் திரும்பி வருவார் என்றும் அன்பில் மகேஷ் அவர்களிடம் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அன்பில் மகேஷுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்ட காவல்துறை தரப்பு, ‘கட்சி நிதி’ என்ற பெயரில் லஞ்சப் பணம் அன்பில் மகேஷிடம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களைச் சேகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
