தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜனநாயகன் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதற்கு மேல் இவரை தியேட்டரில் பார்க்க முடியாதே என்ற உணர்வோடு, ’தளபதி வெற்றி கொண்டானின்’ ஒவ்வொரு Frameஐயும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள். வசூல் மன்னனாகவே வலம் வந்த விஜய்யின் முந்தைய படங்களின் வசூல் சாதனையையும், ஜனநாயகன் படத்தின் வசூல் நிலவரத்தையும் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில்…3 தசாப்தங்களாக மாபெரும் எண்டர்டெயினராக திரையை ஆண்ட கலைஞனின் கடைசி படம், ரசிகர்களாலும் பொது மக்களாலும் கொண்டாடி தீர்க்கப்பட்டு வரும் நிலையில், இப்படி ஒரு Farewell யாருக்கும் நிகழ்ந்ததில்லை என்று உச்சிமுகர்கிறது தமிழ் சினிமா. குழந்தை நட்சத்திரமாக 1984ஆம் ஆண்டு வெளியான வெற்றி படத்தில் நடித்திருந்த விஜய், 1992ல் வெளியான நாளைய தீர்ப்பில் ஹீரோ அவதாரம் எடுத்து 90களின் இறுதியில் முன்னணி நாயகனாக அவதாரம் எடுத்தார்.

திருமலையில் தொடங்கி…2003ஆம் ஆண்டில் வெளியான திருமலை படத்தில் ஆக்சன் ஹீரோவாக மாறிய விஜய், கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி, வேட்டைக்காரன் என ப்ளாக்பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்து வசூல் மன்னனாகவும் மாறினார்.

2011ஆம் ஆண்டு வெளியான காவலன் படத்தில் இருந்தே விஜய் படங்களுக்கு அரசியல் ரீதியான நெருக்கடி தொடங்கிவிட்டாலும், அந்த நெருக்கடிகளைத் தாண்டி சமூக அக்கறை கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியையும் பதிவு செய்தார் விஜய்.

ரூ.100 கோடி வசூலில் தொடங்கி…2012ம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படம், 100 கோடி ரூபாய் வசூலை கடந்த நிலையில், பல தடைகளை தாண்டி ரிலீஸான தலைவா, கத்தி உள்ளிட்ட படங்களும் வசூலை அள்ளின. வசூல் ரீதியாக விஜய்யின் கிராஃபை பார்த்தால், கத்தி – ரூ.132 கோடிதெறி – ரூ. 152 கோடிமெர்சல் – ரூ. 250 கோடிசர்க்கார் – ரூ.255 கோடி என்று வசூர் கிராஃப்ட் ஏற்றத்திலேயே இருக்க, பிகில் படத்தில் 300 கோடி வசூலைத் தாண்டினார். வாரிசு 310 கோடி வசூலை கடந்த நிலையில், லியோ 635 கோடியை தாண்டியது. 2024ஆம் ஆண்டு வெளியான கோட் திரைப்படம் 455 கோடியை கடந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான ஜனநாயகன் ரிலீஸுக்கே பல நெருக்கடிகளை சந்தித்தது.

வெளியானது ஜனநாயகன்சென்சார் பிரச்னையால் ஜனநாயகன் முடங்கியபோதும், முழு படமும் சட்ட விரோதமாக லீக் ஆன போதும் அமைதியாக இருந்த விஜய், தேர்தலில் தனித்து போட்டியிட்டு முதலமைச்சராக அரியணை ஏறினார். முதல்வர் சீட்டில் விஜய் அமர்ந்த 2 மாதங்களுக்குப் பிறகு படத்திற்கு A சான்றிதழ் கிடைத்து ரிலீஸான நிலையில், ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச.ஜோசப் விஜய்’ என்ற டைட்டில் கார்டுடன் அவரது சட்டமன்ற சைகையும் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே நகர்த்தின.

மக்கள் கொண்டாடும் தலைவர் ரசிகனில் இளைய தளபதியாக அவதாரம் எடுத்த விஜய், மெர்சலில் தளபதியாக மாறிய நிலையில், அடுத்து தவெக தலைவராக உருவெடுத்து தமிழ்நாடு முதல்வராக மகுடம் சூடியிருப்பது அவரது ரசிகர்களை பெருமை கொள்ள வைத்துள்ளது. 90களின் இறுதியில் இருந்தே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய விஜய், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளை வசீகரித்து பல தரப்பும் கொண்டாடும் நாயகனாக மாறிப்போனார். 2010 – 2020 வரையிலான காலகட்டத்தில் மக்கள் பிரச்னையில் அவரது நிலைப்பாடுகளும், துணிச்சலாக பேசிய பிரச்னைகளுமே மக்கள் கொண்டாடும் தலைவன் அந்தஸ்திற்கு விஜய்யை உயர்த்தியது.

தனி அரசியல் வரலாறு…தமிழ் சினிமா வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் வசூலில் சக்கரவர்த்தியாக மிளிர்ந்ததுண்டு. தியாகராஜ பாகவதருக்குப் பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, நடிகனும் நாடாளுவான் என்ற நிலையை உருவாக்கினார். அதற்குப் பிறகு எத்தனையோ முன்னணி நடிகர்கள் அந்த ஆசையோடு வந்து ஆட்சிக் கட்டிலில் ஏறாத வரலாறை தமிழகம் பார்த்திருக்கிறது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், யாராலும் எம்ஜிஆர் ஆக முடியாது என்று விமர்சித்தவர்களுக்கு, எம்ஜிஆரைத் தாண்டிய வெற்றியை பதிவு செய்து தனி அரசியல் வரலாறு படைத்திருக்கிறார் விஜய்.

என்றென்றும் நினைவில்…’ஒரு ஆட்டத்தை எவ்வளவு நன்றாக ஆடினோம் என்பது முக்கியமல்ல, அதை எங்கு நிறுத்தினோம், எங்கு முடித்தோம் என்பதையே வரலாறு பேசிக்கொண்டிருக்கும்’ என்பார்கள். இந்த வரிகளுக்கு ஏற்ப, தமிழ் சினிமாவில் வேறு யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத தன்னிகரில்லா உச்சத்தை தொட்ட விஜய், இது போதும் இனி அரசியல் தான் என்று முடிவெடுத்து, சினிமாவுக்கு முழுக்கு போட்டதே மக்கள் அவரை நம்ப முக்கிய காரணமாக அமைந்தது. நூற்றாண்டை நெருங்கும் தமிழ் சினிமாவில் ஒரு நாயகன் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை வகுத்துவிட்டு விடைபெற்றிருக்கும், ‘தளபதி வெற்றி கொண்டானை’ காலம் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜனநாயகன் வசூல்சென்சார் பிரச்னையால் ரிலீஸ் தள்ளிப் போன போதும், முழு படமும் HD Qualityயில் லீக் ஆனபோதும், படத்திற்கு ‘A’ சான்றிதழ் கொடுக்கப்பட்ட போதும், தடைகள் அத்தனையையும் தகர்த்தெறிந்து 4 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் 217 கோடி ரூபாயை தாண்டி வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருப்பதே இதற்கு சாட்சி…
