சென்னை: தவெகவினர் அட்டகாசங்கள் தமிழகத்தில் ஒருவித பதற்ற நிலையை உருவாக்கி உள்ளதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
அவரது அறிக்கை;
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே, தாங்கள் சாப்பிட்ட உணவிற்கும் பணம் கொடுக்குமாறு கூறி, ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாற்றுத் திறனாளி வாலிபர் உள்ளிட்ட 3 சிறுவர்கள் மீது, தவெகவினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.
ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு, பொதுமக்களை அடிமைகள் போல பாவிக்கும் தனது கட்சி தொண்டர்களை முதல்வர் விஜய் கண்டிக்க மறுக்கிறாரா? அல்லது அவரது பேச்சை சொந்தக் கட்சிக்குள்ளேயே எவரும் கேட்பதில்லையா?
பெண்களை பின் தொடருவது, பாலியல் ரீதியாக அத்துமீறுவது, மாமூல் அராஜகத்தில் ஈடுபடுவது, கட்சி அலுவலகத்திலேயே லஞ்சம் வாங்குவது, பொருத்தமற்ற உடல் பாவனைகளால் பொதுமக்களை பயமுறுத்துவது, அரசு அலுவலகங்களில் ரீல்ஸ் எடுத்து தொந்தரவு செய்வது என நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தவெகவினரின் அட்டகாசங்கள், தமிழகத்தில் ஒருவித பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.
எப்போதும் தங்களை ஒரு கதாநாயகன் போல நினைத்துக் கொண்டு, அலப்பறை செய்து கொண்டிருக்கும் தவெகவினர் சமூகத்திற்கு ஆபத்தானவர்காளாக மாறி வருகின்றனர்.
எனவே, தனது கட்சியில் இருக்கும் அனுபவமற்ற ரசிகர்களையும், ஆணவம் பிடித்த இளைஞர்களையும் முதல்வர் நல்வழிப்படுத்த வேண்டும். தமிழகத்தின் பொது அமைதியை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
