சென்னை: அதிமுக செயற்குழுக் கூட்டத்தை அடுத்த மாதம் கூட்ட கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வென்றது. தவெக 108 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுகவின் ஆதரவை தவெக நாடியது. தொடர்ந்து பழனிசாமியின் எதிர்ப்பை மீறி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தனர்.
பொதுக்குழுவைக் கூட்டி, அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை விவாதிக்க வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் வலியுறுத்தினார். மேலும் பொதுக்குழுவைக் கூட்டி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தம்மை நீக்க திட்டமிடுவதாக, பழனிசாமிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சி.வி.சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் பறித்தார்.
உடனடியாக புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்தார். இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.
சி.வி.சண்முகம் அணியில் மீதமிருந்த 19 எம்எல்ஏக்கள் பழனிசாமியுடன் சமரசமாகினர். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் மாநில பொறுப்புகளை பழனிசாமி வழங்கினார்.
அதிகாரம் இல்லாத மாநிலப் பதவி தேவையில்லை. பழையபடி மாவட்டச் செயலாளர் பதவி வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், அதை பழனிசாமி ஏற்கவில்லை. அதனால் புதிய பொறுப்புகள் எங்களுக்கு வேண்டாம்.
தொண்டர்களாகவே தொடர்கிறோம் என 9 எம்எல்ஏக்கள் பழனிசாமிக்கு கடிதம் அளித்திருந்தனர். இந்த சூழலில், ஒவ்வொரு மாவட்டமாக அழைத்து, கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பழனிசாமி கேட்டறிந்தார்.
இக்கூட்டங்களில் அதிருப்தி எம்எல்ஏக்களான சி. வி.சண்முகம், எஸ். பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. இவர்களுடன் பேச்சு நடத்தி, இணக்கமான சூழலை ஏற்படுத்த பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டிய செயற்குழுக் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த இருப்பதாகவும், அதில் கட்சி வளர்ச்சிப் பணிகள், அதிருப்தி நிர்வாகிகளை சமாதானம் செய்வது, தவெக முதல் பட்ஜெட் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க இருப்பதாகவும், தவெக அரசுக்கு கண்டனம், மத்தியஅரசுக்கு கோரிக்கை, அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
