தவெகவில் இணையப் போகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்? திமுகவின் தென் மாவட்ட பலத்தை உடைக்குமா தவெக- பக்கா பிளான் – anita radhakrishnan set to join tvk will tvk break the dmk’s strength in the southern districts

2026 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தது அக்ட்சி. ஆனால் யாரும் எதிர்பாக்காத வகையில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஷாக் கொடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இது திமுகவிற்கு பலத்த அடியாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து திமுக கட்சியை கட்டமைக்க வேண்டும் என்று கட்சி தலைமை முடிவு எடுத்தது. அதன்படி ,திமுக செயற்குழுக் கூட்டத்தை கூட்டி அதில் மாவட்ட செயலாளர்களின் வயது வரம்பை 70 ஆக மாற்றியது. இதனால் திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகள் பதவி இழக்கும் சூழல் ஏற்பட்டது. அதில் 74 வயதான அனிதா ராதாகிருஷ்ணனும் ஒருவர். திமுக தலைமையின் இந்த முடிவால் கடும் அப்செட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சியா?

இதனைத் தொடர்ந் து முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கியதூத்துக்குடி எம்.எல்.ஏ.அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அப்போது திமுக தலைமை அவருக்கு ஆதரவாக பேசியதே தவிர 2ம் கட்டத்தலைவர்கள் யாரும் அவரை சந்தித்து பேசவில்லை. இதனால்,அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

எப்போதும் களத்தில் ஆக்டிவாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் சமீபகாலமாக அமைதி காத்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, கட்சியில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், அவர் படிப்படியாக ஓரங்கட்டப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் ஒருவித பேச்சும் அடிப்பட்டு வருகிறது.

இதற்கிடையே,திமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரான அனிதா ராதாகிருஷ்ணன் தவெகவில் இணையவிருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.ஏற்கனவே அனிதா ராதாகிருஷ்ணனின் விஸ்வாசி என அறியப்பட்ட பில்லா ஜெகன், தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்க தவெக.,வில் இணைய முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. பில்லா ஜெகன், விஜய் ரசிகராகவும், ஆரம்ப காலம் முதல் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணனை குறிவைக்கிறதா தவெக?

இருந்தாலும் அவர் திமுக.,வில் இருந்து விட்டு, தற்போது தவெக சட்டசபை தேர்தல் மட்டுமின்றி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விட்டதால் இப்போது தவெக.,வில் இணைய வருவதால் விஜய் அவரை கட்சியில் சேர்ப்பதற்கு நோ சொல்லி உள்ளாராம்.
ஆனால் பில்லா ஜெகனை தவெக.,வில் இணைய முயற்சி செய்யும் படி சொன்னதே அனிதா ராதாகிருஷ்ணன்தான் என சொல்லப்படுகிறது. காரணம், இதுவரை அதிமுகவிலிருந்து பல முக்கியப் பிரமுகர்கள் தவெகவில் இணைந்து வரும் நிலையில், தற்போது முதன்முறையாக திமுகவிலிருந்து ஒரு நிர்வாகி வரத் தயாராக இருந்தால் அதை தவெக ஏற்றுக் கொள்ளுமா என ஆழம் பார்க்க தான் பில்லா ஜெகனை பயன்படுத்தி இருக்கிறார்களாம்.

அனிதா ராதாகிருஷ்ணன் மீது சில வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அவர் அனுபவமிக்க ஒரு அரசியல்வாதி என்பதால் அவரை கட்சியில் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மிகுந்த செல்வாக்குக் கொண்டவரும், தொடர்ச்சியாகத் தேர்தல் வெற்றிகளைப் பெற்று வருபவருமான அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற செல்வாக்கு மிக்க தலைவர்கள் தவெகவில் இணைந்தால், அது மீனவ சமுதாயத்தின் வாக்குகளை ஈர்க்கவும், தென் மாவட்டங்களில் கட்சியைப் பலப்படுத்தவும் பெரிதும் உதவியாக இருக்கும் என்று தவெக தரப்பு கருதுவதாகவும் கூறப்படுகிறது.

திமுகவின் மூத்த நிர்வாகிக்கு பதவி நெருக்கடி

குறிப்பாக, வரவிருக்கும் இடைத்தேர்தல்களை மனதில் வைத்து அனிதா ராதாகிருஷ்ணனை கட்சியில் சேர்க்கும் எண்ணத்திற்கு தவெகவும் வந்துள்ளதாம். திமுக.,வில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற அனுபவம் மிக்க தலைவர்கள் தவெக பக்கம் சென்றால், அவரை தொடர்ந்து மேலும் பலரும் திமுக.,வில் இருப்பவர்களும் தவெக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, திமுகவிலும் அதிமுகவிலும் உரிய பதவிகள் கிடைக்காத பல தலைவர்கள் தவெகவில் இணைவதற்குத் தயாராகவே இருக்கின்றனர். குறிப்பாக, மாவட்டச் செயலாளர் போன்ற முக்கியப் பதவிகள் கிடைத்தால், திமுக.,வின் அதிருப்தியாளர்கள் பலர் தவெகவை நோக்கி ஈர்க்கப்படலாம்.

இருப்பினும், திமுக மற்றும் அதிமுக போன்ற பிரதானக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெகவில் இணைவது கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கும் வளர்ச்சிக்கும் எந்த அளவுக்குப் பலன் தரும் அல்லது எதிர்காலத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தவெகவின் இந்த வியூகம் தமிழக அரசியலில் எந்த மாதிரியான மாற்றங்களை உருவாக்குகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Source link