தீவுத்திடல் பட்டாசு கடை டெண்டர்: பிரத்யேக அதிகாரப் பிரிவுகளை நீக்கி நீதிமன்றம் அதிரடி

தீவுத்திடல் பட்டாசு கடை டெண்டர் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.  சென்னை பட்டாசு விற்பனையாளர் நலச் சங்கத்தின் செயல் தலைவர் நடராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

அதில் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் கூட்டிய கூட்டத்தில், பட்டாசு கடைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தங்களின் விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், திடீரெனக் கடைகள் ஒதுக்கீட்டிற்கு ஈ-டெண்டர் முறையில் பங்கேற்கும் படி தங்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

இந்த ஈ-டெண்டர் நடைமுறை எந்தவொரு முறைகேடும் இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் நடக்குமா என்ற அச்சத்துடனும், சந்தேகத்துடனும் மனுதாரர்கள் நீதிமன்றக் கதவைத் தட்டினர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வி.டி. ஆஷா, பட்டாசு வியாபாரிகளின் அச்சத்தைப் போக்கும் வகையில் மிக முக்கியமான அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

அரசு தரப்பிடம் டெண்டர் அறிவிப்பைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, ஈ-டெண்டர் நடைமுறையை நீதிமன்றமே நேரடியாகக் கண்காணிக்கும் என்று அதிரடியாக அறிவித்தார். குறிப்பாக, எந்தவொரு முறையான காரணமும் இல்லாமல் டெண்டரை நிராகரிப்பதற்கோ அல்லது ரத்து செய்வதற்கோ தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநருக்கு வழங்கப்பட்டிருந்த பிரத்யேக அதிகாரப் பிரிவுகளை நீக்கி நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த டெண்டர் படிவங்களை உயர்நீதிமன்றப் பதிவாளர் சுபா அன்புமணி முன்னிலையில் ஒப்படைக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் மனுதாரர் சங்கப் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே இந்த டெண்டர்கள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும் என்றும், அதில் உள்ள விவரங்களைத் துல்லியமாகத் தொகுத்து ஒரு முழுமையான அட்டவணையாகத் தயாரித்து வரும் அக்டோபர் 27ஆம் தேதிக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.