தவெகவுக்கு தாவிய அதிமுக 'மாஜி'க்கள்; சபாநாயகர் விசாரணை ஆக., 4க்கு தள்ளி வைப்பு

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் நான்கு பேரிடம் நடக்கவிருந்த விசாரணை ஆக. 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் – மரகதம் குமரவேல், பெருந்துறை – ஜெயகுமார், தாராபுரம் – சத்யபாமா, அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா, கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை – சி.விஜயபாஸ்கர் ஆகியோர், தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர்.

இதில், மரகதம் குமரவேல், ஜெயகுமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் மீது கட்சி தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சபாநாயகர் பிரபாகரிடம், அதிமுக தரப்பில் முறையிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சபாநாயகர், நான்கு பேரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். 2வது முறையாக, விசாரணைக்கு நால்வரும் அழைக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்சும் அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால், பதவியை ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏக்கள் கொடுத்த கடித நகலை வழங்கும்படி, இபிஎஸ் தரப்பில் கேட்கப்பட்டு உள்ளது. அதை வழங்குவதாக சபாநாயகர் கூறியதாக, அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இபிஎஸ் முன்னிலையில், நான்கு முன்னாள் எம்எல்ஏக்களிடம் நடக்கவிருந்த விசாரணை, ஆகஸ்ட், 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, சட்டசபை செயலாளர் சாந்தி வாயிலாக, அனைவருக்கும் முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

Source link