– நமது நிருபர் –
தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றி கழக கூட்டணி அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெறும் சூழல் உருவாகியுள்ளதாக, அக்கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் கூறிய நிலையில், ‘தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடாது’ என, கட்சியின் டில்லி மேலிடம் அவரை கண்டித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவர், ”இடதுசாரி கட்சிகள் ஆட்சி அமைக்கும் காலம் வரும்போது, அமைச்சரவையில் இடம் பெறுவோம்,” என, திடீர் ‘பல்டி’ அடித்துள்ளார்.
சமீபத்தில் ஓசூர் சென்ற வீரபாண்டியன், ‘தவெக அமைச்சரவையில் இ.கம்யூ., இடம் பெறும் சூழல் வரும். அந்த சூழல் வரும்போது, கம்யூ., தோழர்கள் அமைச்சர்களாக வருவர்; அந்த காலம் நெருங்குகிறது’ என தெரிவித்தார்.
இந்த கருத்தை, இ.கம்யூ., முன்னாள் மாநில செயலர் முத்தரசன், திருப்பூர் எம்.பி., சுப்பராயன் போன்றோர் ஆதரிக்கவில்லை; அமைச்சரவையில் இடம்பெறக் கூடாது என்றும், வெளியிலிருந்து தான் தவெக ஆட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்; டில்லி மேலிடத்திலும் அதை வெளிப்படுத்தினர்.
இதுபோல வீரபாண்டியன் கருத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் வரவேற்பு கிடைக்கவில்லை. ‘அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம்’ என, மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் மறுத்து விட்டார்.
இந்நிலையில், தவெக அமைச்சரவையில் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கவும், தவெக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், தனக்கு நெருக்கமான இ.கம்யூ., டில்லி மேலிட தலைவர்களிடம், மதிமுக பொதுச்செயலர் வைகோ பேசியுள்ளார்.
இதையடுத்து, வீரபாண்டியனை இ.கம்யூ., மேலிட தலைவர்கள் அழைத்து பேசி, ‘தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து, தன்னிச்சையான முடிவு எடுக்க வேண்டாம்; கட்சியின் மாநில நிர்வாகக்குழு, செயற்குழு, தேசிய செயற்குழு கூடி தான் முடிவு எடுக்க வேண்டும்’ என, அறிவுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து, சென்னை அம்பத்துாரில் இடதுசாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ‘அமைச்சரவையில் இடம்பெறக் கூடாது’ என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வீரபாண்டியன் கூறுகையில், ”தவெக அமைச்சரவையில் இடம் பெறுவோம் என நான் சொல்லவில்லை. இடதுசாரி கட்சிகள் ஆட்சி அமைக்கும் காலம் வரும்போது, இ.கம்யூ., கட்சியும் அமைச்சரவையில் இடம் பெறும் சூழல் உருவாகும் என்ற அர்த்தத்தில் தான் கூறினேன்.
”தவெக அரசை ஐந்து ஆண்டுகளுக்கு ஆதரிக்கும் முடிவில் மாற்றம் இல்லை. தவெக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்,” என்றார்.
