`என்.ஆர்.காங்கிரஸ் முக்கியம்தான்… ஆனால்.!’
புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது. அந்தக் கூட்டணி அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியை சந்தித்தது.
அதன்பிறகு முதல்வர் ரங்கசாமியிடம் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஆனால் அதற்கு சிறிதும் பிடி கொடுக்காமல் பா.ஜ.க தரப்பை இழுத்தடித்து வந்தார் ரங்கசாமி.
அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த அவர், `தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும்’ என்று கூறிவிட்டுச் சென்றார். அதையடுத்து புதுச்சேரியில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, `எங்கள் கூட்டணியில் முக்கியமான கட்சி என்.ஆர்.காங்கிரஸ்தான்.
`த.வெ.க தலைவர் விஜய்யிடம் பேசுங்கள்…’
அதேசமயம் லட்சிய ஜனநாயகக் கட்சி எங்கள் கூட்டணிக்குள் வருகிறது. அதற்கு முதல்வர் ரங்கசாமி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் கடந்த 16-ம் தேதி இரவு அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தார் முதல்வர் ரங்கசாமி.

அப்போது, `ல.ஜ.க கூட்டணிக்குள் வருவதை நாம் எதிர்க்கவில்லை என்று அவர்களாகவே கூறுகிறார்கள். அடுத்த தேர்தலே வந்துவிட்டது. ஆனால் நாம் வைத்த மாநில அந்தஸ்து கோரிக்கை அப்படியே நிற்கிறது. அவர்களுக்கு `லாட்டரி’ மார்ட்டின் குரூப் முக்கியம் என்றால் நாம் தனித்துப் போட்டியிடுவோம். இல்லையென்றால் த.வெ.க தலைவர் விஜய்யிடம் பேசுங்கள்’ என்று முகம் சிவந்திருக்கிறார்.
`ல.ஜ.க எங்களுடன்தான் இருக்கும், நீங்கள் வெளியேறுங்கள்…’
அதையடுத்து தனியார் விடுதியில் பா.ஜ.க நிர்வாகிகளுடன் காத்திருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை இரவோடு இரவாக சந்தித்தனர் என்.ஆர்.காங்கிரஸ் குழுவினர். அப்போது, `முதல்வர் ரங்கசாமி வரவில்லையா?’ கேட்டிருக்கிறார் மன்சுக் மாண்டவியா. அதற்கு, `அவர் வரவில்லை. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததும் சந்திப்பார்’ என்று அவர்கள் சொன்னதும், அவரின் முகம் சட்டென சுருங்கிப் போயிருக்கிறது. அதையடுத்து அவர்களிடம் முதல்வரின் கருத்தை தெரிவித்திருக்கிறார்கள் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள்.

அதற்கு, `ல.ஜ.க எங்களுடன்தான் இருக்கும். வேண்டுமானால் நீங்கள் வெளியேறலாம்’ என்று பா.ஜ.க தரப்பில் ஆவேசமாகக் கூறியிருக்கிறார். அதில் உஷ்ணமான என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் குழுவினர், `என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இல்லை என்று நீங்களே அறிவித்துவிடுங்கள்’ என்று கூறிவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். தோல்வியில் முடிந்த இந்த பேச்சுவார்த்தையால், உள்ளூர் தலைவர்கள்தான் துவண்டு போயிருக்கிறார்கள்.
மத்திய அமைச்சருக்கு தண்ணீர் காட்டிய ரங்கசாமி!
குறிப்பாக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பா.ஜ.கவைச் சேர்ந்த இரண்டு பேர், `என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லையென்றால், நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை’ என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து, `த.வெ.க-வுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என்ற கேள்வியுடன் என்.ஆர்.காங்கிரஸின் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபாலிடம் நாம் பேசியபோது, `ல.ஜ.க கூட்டணிக்குள் வருவதை நாங்கள் விரும்பவில்லை. பா.ஜ.க அதை ஏற்கவில்லை என்றால் நாங்கள் வேறு முடிவை எடுப்போம். அதேபோல த.வெ.க-வுடனான கூட்டணிக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன’ என்று முடித்துக் கொண்டார்.

இதற்கிடையில் என்.ஆர்.காங்கிரஸின் கோரிக்கையை டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் கூறிய மன்சுக் மாண்டவியா, 19-ம் தேதி மதியம் 1 மணிக்கு முதல்வர் ரங்கசாமியை சந்திப்பதாக திட்டமிடப்பட்டது. அந்த தகவல் முன்கூட்டியே முதல்வர் ரங்கசாமிக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் 12.30 மணிக்கு திருச்செந்தூர் கோயிலுக்கு கிளம்பிச் சென்றுவிட்டார் முதல்வர் ரங்கசாமி. அவரின் இந்த தொடர் புறக்கணிப்பால் துவண்டு நிற்கிறது பா.ஜ.க
இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, “சுயேச்சை மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களை வளைத்து வைத்திருக்கும் லாட்டரி சார்லஸ் மார்ட்டின், இந்த தேர்தல் அவர்களை களமிறக்கி வெற்றிபெற வைக்க நினைக்கிறார். அவர்கள் மூலம் தேர்தலுக்குப் பிறகு ரங்கசாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, புதுச்சேரியை கேசினோ பூமியாக்குவதுதான் அவர்கள் திட்டம். தவிர, பா.ஜ.க சார்லஸ் டீமை ஏ.டி.எம் இயந்திரமாக பார்க்கிறது. அதனால்தான் இப்படி முரண்டு பிடிக்கிறார்கள்” என்றார்.
இதுகுறித்து பா.ஜ.க தரப்பில் பேசியபோது, “என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணியே தொடரும். என்.டி.ஏ கூட்டணியில் ல.ஜ.க இருக்காது. இன்று முடிவு அறிவிக்கப்பட்டுவிடும்” என்றனர்.
