தாயைக் கொ*ன்று 2 மகள்களைக் கடத்திச் சென்ற கும்பல்; வீடு புகுந்து நிகழ்த்திய கொடூரச் சம்பவம்!

தூத்துக்குடியில் அத்துமீறி வீடு புகுந்து பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு மகள்கள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மேரி ரெஜிலா என்பவருடன் திருமணமாகி, பிளஸ்ஸி (15), பிரின்ஸா (14) என்ற 2 மகள்களும், பிளஸெட் ராஜா என்ற மகனும்  உள்ளனர்.

இந்த சூழலில் இன்று (23-10-26) அதிகாலை பொழுது முத்துகிருஷ்ணனின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் அத்துமீறு நுழைந்துள்ளனர். அதன் பிறகு அந்த கும்பல், முத்துகிருஷ்ணன், மேரி ரெஜிலா, பிளஸெட் ராஜா ஆகிய 3 பேரையும் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், முத்துகிருஷ்ணனின் இரு மகள்களான பிளஸ்ஸி, பிரின்ஸா ஆகிய 2 பேரையும் அந்த கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். இதற்கிடையில், தாக்குதலில் பலத்த காயமடைந்த மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது கணவர் முத்துகிருஷ்ணன் மற்றும் பிளஸெட் ராஜா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், அங்கு விரைந்து மேரி ரெஜிலாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள முத்துகிருஷ்ணன் மற்றும் பிளஸெட் ராஜா ஆகிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாயைக் கொன்று இரு மகள்களையும் கடத்திச் சென்ற நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், பரோட்டா மாஸ்டர் ஞானபிரகாஷ் என்பவரை கைது செய்துள்ளனர்.

15 வயதான பிளஸ்ஸியை ஞானபிரகாஷ் காதலித்து வந்ததாகவும், இந்த காதலுக்கு மேரி ரெஜிலா எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை வீடு புகுந்து கொலை செய்துவிட்டு பிளஸ்ஸி மற்றும் பிரின்ஸா ஆகியோரை அவர் கடத்திச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஞானபிரகாஷ் கடத்திச் சென்ற இரண்டு பேரையும் போலீசார் மீட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.