திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வழியாக சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்தை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அங்கு தினந்தோறும் தங்கம் கடத்துவது, அரிய வகை உயிரினங்கள் கடத்துவது, விலை உயர்ந்த போதைப் பொருள் கடத்துவது என அன்றாடம் ஏதேனும் ஒரு நிகழ்வு அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில், திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரிய வகை வனவிலங்குகள் மற்றும் ஊர்வன உயிரினங்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு வழியாக திருச்சி வந்து இறங்கிய விமானத்தில் பயணித்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த இரண்டு இந்தியப் பயணிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அவர்களுடைய உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தபோது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கொண்டு வந்த பைகளில் இருந்த 27 உணவு பொட்டலங்களுக்குள் அரிய வகை வனவிலங்குகளை உயிருடன் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
அவற்றிலிருந்து 23 பாம்புகள், 16 மலைப்பாம்புகள், 5 தேகு மற்றும் ஒரு வெள்ளை உடும்பு உட்பட மொத்தம் 45 ஊர்வன உயிரினங்கள் உயிருடன் மீட்கப்பட்டன. இதையடுத்து, சட்டவிரோதமாக வனவிலங்குகளைக் கடத்தி வந்த குற்றத்திற்காக 1962-ம் ஆண்டு சுங்கச் சட்ட விதிகளின்படி அந்த இரண்டு இந்திய பயணிகளையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அரிய வகை ஊர்வன உயிரினங்கள் அனைத்தும் மேல் விசாரணைக்காக திருச்சி விமான புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்த ஒரு விமானத்தில் நூற்றுக்கணக்கான கொடூர விஷமுடைய பாம்புகள் மற்றும் வன உயிரினங்கள் கடத்தி வரப்பட்ட இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
