தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் பகுதியைச் சேர்ந்த சுகன்யா, கட்சி மற்றும் தொகுதி மக்களுடன் தொடர்ந்து பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. அவரது அரசியல் பின்னணி, குடும்ப பின்னணி மற்றும் தாராபுரம் தொகுதியில் அவருக்கு உள்ள பலம் என்ன? யார் இந்த சுகன்யா என்பதை விரிவாக பார்க்கலாம்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் திமுக Vs தவெக என மாறி வரும் நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களும் தற்போது கவனம் பெற்றுள்ளன. தேர்தல் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழுந்த அதிருப்தி அலை கட்சிக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சில எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் தமிழகத்தில் ஆறு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல்
இந்த சூழலில், அதிமுக சார்பில் தாராபுரம் தனித் தொகுதியில் வெற்றி பெற்ற சத்யபாமாவும், மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேலும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்த திமுக
இந்த நிலையில், திமுக தலைமை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தனித் தொகுதியில் எஸ். சுகன்யாவும் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இடைத்தேர்தல் களத்தில் திமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.
யார் இந்த சுகன்யா?
தாராபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ். சுகன்யா வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் திமுக ஒன்றிய அணி செயலாளராக உள்ளதாக கூறப்படுகிறது. சொந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அப்பகுதி மக்களுடன் அரசியல் மற்றும் கட்சி ரீதியாக தொடர்ந்து பணியாற்றி வந்திருப்பதும் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளதாக தெரிகிறது.
திருப்போரூர் தொகுதியில் எந்த கட்சிக்கு செல்வாக்கு அதிகம்?
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட சுகன்யா ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் தற்போது அவருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Source link
