திடீரென பரவிய தகவல்; மெரினாவில் போலீசார் குவிப்பு

கடந்த சில நாட்களாக நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திலும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல மெரினாவில் ஒன்று திரண்டு பிரம்மாண்ட போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பரவின.

இதனால் பொது இடங்களில் போராட்டக்காரர்கள் சட்டவிரோதமாகக் கூடுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மெரினா கடற்கரைக்குள் பொதுமக்கள் நுழைவதற்குத் தற்போது காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மெரினா சர்வீஸ் சாலை, மணற்பரப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள ரயில் நிலையங்கள் ஆகிய முக்கியப் பகுதிகள் அனைத்தும் காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, 300-க்கும் மேற்பட்ட போலீசார் மெரினாவில் தற்பொழுது தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்கள் மற்றும் பிற ஊர்களில் இருந்து கடற்கரையைக் காண வரும் பொதுமக்களைப் போலீசார் தடுத்து நிறுத்தி, சூழலை எடுத்துரைத்துத் திருப்பி அனுப்பி வருகின்றனர். கடற்கரைப் பகுதியில் ஆங்காங்கே இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாகப் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரை தற்பொழுது மக்கள் நடமாட்டமின்றி முற்றிலும் வெறிச்சோடி காணப்படுகிறது.

Source link