சென்னை : தனியார் மருத்துவமனைகளில் நடந்த கிட்னி திருட்டுகளை, முறைகேடு என கடந்த ஆட்சியில் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதை திருட்டு என மாற்றி, விசாரணையை வேகப்படுத்தி உள்ளனர்.
உடல் உறுப்புகள் தானம் பெறுவதில், தமிழகம் முன்னிலையில் இருந்தாலும், உறுப்பு மாற்று சிகிச்சைகளில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மூளைச்சாவு அடைவோரிடம் இருந்து பெறப்படும் உறுப்புகளானது, தானம் கோரி ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு உரிய பதிவு வரிசைப்படி வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதில், மாநில உறுப்பு மாற்று ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது.
அதேநேரம், உயிருடன் இருப்பவர்கள், தங்களது ரத்த உறவுகளுக்கு கல்லீரல் அல்லது சிறுநீரகத்தை தானமாக அளிக்கும் நடைமுறைகளை கண்காணிப்பதில், சில கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இதை பயன்படுத்தி, இடைத்தரகர்களும், தனியார் மருத்துவ துறை சார்ந்த சிலரும், வறுமையில் உள்ளவர்களை உறுப்பு தானம் அளிக்குமாறு, மூளைச் சலவை செய்கின்றனர். அவர்களை நோயாளியின் ரத்த உறவு என அடையாளப்படுத்த, போலி ஆவணங்களையும் தயார் செய்கின்றனர்.
இதுபோன்ற சம்பவம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடந்தது. இதுகுறித்த விசாரணையில், தி.மு.க., ஆட்சியில், இரண்டு தனியார் மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, மஹாராஷ்டிரா விவசாயிகளிடம், தமிழகத்தை சேர்ந்த டாக்டர்கள், இடைத்தரகர்கள், சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், இரண்டு விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. குறிப்பாக, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் டாக்டர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், தி.மு.க., ஆட்சியில் இது முறைகேடு என தெரிவிக்கப்பட்ட நிலையில், த.வெ.க., அரசு, அதை கிட்னி திருட்டு என, புகாரை மாற்றி குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து, அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில், ”கிட்னி திருட்டு விவகாரத்தை சிறப்பு குழு விசாரித்து வருகிறது. விரைவில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை பெயர்கள் வெளியிடப்படும்,” என்றார்.
