திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கடந்த 18ஆம் தேதி (18.07.2026) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி (20.07.2026) காலை 5 மணி அளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அதன் பின்னர் அவரை தூத்துக்குடியில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் 351 (3), 352, 353 (2) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக நடைபெற்ற 9 மணிநேர விசாரணைக்குப் பின் அன்று இரவே தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த மருத்துவப் பரிசோதனைக்குப் பின் நீதிபதி சுமதி முன் முன்னிறுத்தப்பட்ட நிலையில் ஜீ.வி. மார்க்கண்டேயனை ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

முன்னதாக போலீசார் தரப்பில் போலீஸ் காவலில் எடுத்து ஜீ.வி.மார்க்கண்டேயனை போலீசார் விசாரிக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், அதனை மறுத்த நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இத்தகைய சூழலில் தான் , திமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து சிறைக்குச் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த , எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு  கட்சி  நிர்வாகிகளுடன் சென்று மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

முன்னதாக சிறையில் மார்க்கண்டேயனை சந்திப்பதற்காக திமுக வழக்கறிஞர்கள் சார்பில் ஏற்கனவே சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் சிறப்பு சந்திப்பில் பங்கேற்றனர். இதற்கிடையில், கடந்த 22ஆம் தேதி மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Source link