தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை ஒருமையில் விமர்சித்துப் பேசியதோடு, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யை விமர்சித்ததற்காக திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அதாபது இன்று (20.07.2026) அதிகாலையில் மார்க்கண்டேயன் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். தமிழகத்தில் அண்மைக் காலமாக தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான அரசியல் மோதல் நிலவி வரும் சூழலில், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளாத்திகுளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன், கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்து பின்னர் திமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து திருச்செந்தூர் நீதிமன்றம் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது கவனிக்கத்தக்கது.
