தியான பீட ஆசிரமத்தில் அமைச்சர் பங்கேற்றதால் சர்ச்சை?; வீடியோவில் தோன்றி ஆசிர்வதித்த நித்தியானந்தா!

சர்ச்சை வீடியோ ஒன்றால் உலகப் புகழ் பெற்றவர் நித்தியானந்தா. இதையடுத்து, மதுரை ஆதினத்துடன் ஏற்பட்ட தகராறு, பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளால், அவர் மீது குற்றச்சாட்டு கிராஃப் கிடுகிடுவென ஏறிக்கொண்டே போனது. இதன் தொடர்ச்சியாக, அகமதாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர்.

இதனால், இந்தியாவை விட்டே தப்பியோடிய நித்தியானந்தா, ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள தீவில் அடைக்கலம் ஆனதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து இந்தியாவிலிருந்து திடீரெனத் தலைமறைவாகி, பசிபிக் பெருங்கடல் பகுதியில் கைலாசா என்ற தனித் தீவு நாட்டை உருவாக்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் நித்தியானந்தா பரப்பி வருகிறார். இந்த சூழலில், அவர் மீண்டும் இந்தியா திரும்ப உள்ளதாக எழுந்துள்ள ரகசியத் தகவல் அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. அதாவது புதுச்சேரிக்கு நித்தியானந்தா நேரடியாக வரவிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் வெளியான செய்தி, தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

புதுச்சேரியின் ஏம்பலம் கிராமத்தில் நித்தியானந்தா ஆசிரமத்தின் சார்பில் ஒரு பிரம்மாண்ட தியானபீடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆசிரமம் பல்வேறு கடுமையான சர்ச்சைகளில் சிக்கியபோது, உள்ளூர் மக்களால் அடித்து உடைக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த ஆசிரமம் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு, அங்குள்ள கைலாச ஞான பீடத்திற்கு விரைவில் மகா கும்பாபிஷேகம் அல்லது குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் நித்தியானந்தா பங்கேற்க புதுச்சேரிக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக அண்மையில் புதுச்சேரி முதல்வ ரங்கசாமியை நித்தியானந்தாவின் சீடர்கள் சந்தித்து பேசியதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், நித்தியானந்தா ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் பங்கேற்ற வீடியோ ஒன்றில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி ஏம்பலம் பகுதியில் உள்ள நித்தியானந்தா தியான பீடத்தில் அண்மையில் நவராத்திரி பூஜை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ மோகன் தாஸ் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவில், அமைச்சர் நமச்சிவாயத்தையும் , எம்.எல்.ஏ மோகன் தாஸையும் நித்தியானந்தாவின் சீடர்கள் வரவேற்பதும், நித்தியானந்தா காணொளி மூலமாக தோன்றி அவர்களிடம் பேசி அருள்புரிவதும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ அரசியல் தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.