தேர்தல் களத்தில் ஆளும் கட்சி தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அவர்களை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்கள் ஒவ்வொரு கட்டங்களாக வெளியாகி வருகிறது. இந்நிலையில், தவெக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதியில் சிறுபான்மையினர் வாக்கு வங்கியினை குறி வைத்தும், இளைஞர்கள், இளம் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளதால், இந்த தொகுதியில் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. அவரை எதிர்த்து ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ள இனிகோ இருதயராஜ் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடும் நிலையில், கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். கடந்த முறை அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டியை எதிர்த்து போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2026-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2,17,397 வாக்காளர்கள் உள்ளனர். இதில் சுமார் 1,04,883 ஆண்கள் மற்றும் 1,12,460 பெண்கள், மற்றும் 54 இதர வாக்காளர்கள் அடங்குவர்.
கடந்த முறை வெற்றி நாள் முதல் இன்றுவரை தொடர்ந்து திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பாலான பணிகளை தானே முன்நின்று செய்த இனிகோ இருதயராஜ், எம்எல்ஏவாக பொறுபேற்றதில் இருந்து அதிரடியாக களத்தில் தன்னுடைய இன்னிஸ்சை தொடங்கியவர். அதோடு மட்டுமல்லாமல் மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். அதேபோல், தீபாவளி, கிறிஸ்மஸ் என்று முக்கிய பண்டிகைகள் வரும் சமயங்களில், திமுகவினரையும் அழைத்து பரிசு பொருட்கள் வழங்கி அவர்களை உற்சாகமாக பணியாற்றிட செய்வதோடு, யாருடனும் பகைமை பாராட்டாமல் அணைவரோடும் அரவணைத்து செல்வதோடு, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் ஒன்றை நடத்தி வரும் நிலையில், தொகுதியில் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பாக கலந்து கொண்டு தன்னுடைய பங்களிப்பை தொடர்ந்து தருகிறார். கடந்த முறை அவருக்கு கிடைத்த வாய்ப்பை மிக சிறப்பாக கையாண்டதால், இந்த முறையும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டள்ளது. அதேபோல் தொகுதியில் தனக்கென ஒரு வாக்கு வங்கியை பெற்றிருக்கும் அவருக்கு இந்த தொகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி தான் அவரை வெற்றி பெற செய்தது.
இந்த முறையும் அவர் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கு காரணம் சட்டமன்ற அலுவலகம் அமைத்து நேரடியாக வாரம் தவறாமல் மக்களை சந்தித்து வரும் நிலையில், நாளை இந்த தொகுதியில் நடிகர் விஜய் வெற்றி பெற்றால் அவரை யாராலும் சந்திக்க இயலாது, அவருக்கு பதிலாக யாராவது ஒரு நபரை அந்த இடத்தில் நியமித்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். அவருக்கு கள நிலவரம் என்ன என்பது தெரியாது, பொதுமக்களின் பிரச்சனைகள் குறித்தும் தெரியாது. தொகுதியில் உள்ள மக்களின் மனநிலை, அவர்களின் வாழ்வாதாரம், கலாச்சாரம் என்று பலவற்றை புதிதாக தெரிந்து கொண்டு பணியாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே இந்த தேர்தலில் கிழக்கு சட்டமன்ற தொகுதியானது மிகவும் கடுமையான போட்டியை சந்திக்க உள்ள நிலையில், விஜய் ஏன் திருச்சி கிழக்கைத் தேர்ந்தெடுத்தார் என்று விசாரித்தோம்.
“திருச்சி மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள தொகுதி, கிராம பகுதிகள் இல்லாத தொகுதி, சிறிய தொகுதி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்று சிறுபான்மையினர் அதிகம் நிறைந்த தொகுதி என்பதால், இங்கு நின்றால் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. செலவு அதிகம் செய்ய வேண்டியதில்லை. எளிதாக ஜெயிக்கலாம் என்று திராவிடக் கட்சிகளில் பொதுவாக இந்தத் தொகுதியைப் பெற போட்டா போட்டி இருக்கும். அதேபோல்தான், விஜய் இந்தத் தொகுதியை விரும்பியிருக்கிறார். விஜய் தனது மக்கள் சந்திப்பின் முதல் பயணத்தை திருச்சியில் தொடங்கினார். அப்போதே, விஜயின் ரசிகர் ஒருவர், ‘விஜய் திருச்சியில் போட்டியிட வேண்டும்’ என்று திருச்சி முழுக்க நோட்டீஸ் அடித்து ஒட்டி, பரபரப்பு பந்தி வைத்தார். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்கிறார்கள். நகர பகுதிகளை மட்டும் கொண்ட தொகுதி. இங்கு கல்லூரிகளும் அதிகம். இளைஞர்களின் வாக்குகள் இங்கு அதிகம் விஜய்க்கு விழும். கல்லூரி மாணவர்களே நாங்கள் சொல்லாமலேயே விஜய்க்காக வாக்கு சேகரிப்பார்கள். அதனால், விஜய் இங்கு நின்றால் எளிதாக ஜெயிக்கலாம். அதனைக் கருத்தில் கொண்டே இங்கு நிற்க வேண்டும் என அவரைத் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார்கள். கடைசியில் தலைமையும், பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அடுத்தக்கட்ட புள்ளிகளும், ‘விஜய் திருச்சி கிழக்கில் நிற்க வேண்டும்’ என்று விரும்பினார்கள். அதனால், தற்போது விஜய் திருச்சி கிழக்கு தொகுதியிலும் வேட்பாளராகியிருக்கிறார்” என்றார்கள்.
கள நிலவரப்படி கடந்த 5 ஆண்டுகளில் இனிகோ இருதராஜ், சட்டமன்ற உறுப்பினர் என்பதை கடந்து, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் என்ற அடிப்படையில், இந்த தொகுதியில் உள்ள எல்லா கிறிஸ்தவர்களோடும், இஸ்லாமியர்களோடும் மிக நெருக்கமாக நெருங்கி பழகி ஒரு உறவை வளர்த்து வைத்துள்ளார். இப்பகுதியில் கல்வி பயிலும் பெரும்பாலான கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை செலுத்தியும், அவர்கள் படிப்பதற்கு கல்லூரிகளில் வாய்ப்பை ஏற்படுத்தியும் கொடுத்திருக்கிறார். எனவே இந்த 5 ஆண்டுகால உழைப்பு மீண்டும் அவருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் அமைந்துள்ளது என்றே சொல்லாம்.
