தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கலையரங்கத்தில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், எஸ்.பி. சிவபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் கூறியது: “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 10 முதல் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வுகளாக சூரசம்ஹாரம் நவம்பர் 15-ம் தேதியும், திருக்கல்யாணம் 16-ம் தேதியும் நடைபெறவுள்ளது.
திருவிழா காலமான 12 நாட்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு 5 எஸ்.பி.க்கள், 16 ஏடிஎஸ்பிக்கள், 50 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 4,298 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கோயில் வளாகத்துக்குள் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
மொத்தம் 493 சிசிடிவி கேமராக்கள் (384 நிரந்தர மற்றும் 109 தற்காலிகக் கேமராக்கள்) மற்றும் 26 எல்இடி திரைகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்புகளும் பாதுகாப்பும் உருவாக்கப்படும். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 17 போக்குவரத்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு, அவசர கால ஊர்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு தடையற்ற வழிகள் உறுதி செய்யப்படும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன், இதர கழகங்களில் இருந்து 135 சிறப்புப் பேருந்துகள் சேர்த்து மொத்தம் 302 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும் சென்னை மற்றும் திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
12 இடங்களில் அமைக்கப்படும் வாகன நிறுத்துமிடங்கள் மூலம் சுமார் 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நவம்பர் 10 முதல் 15 வரை தினமும் 5 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவுள்ளது. அதேப்போல் நகராட்சி நிர்வாகம் சார்பில் 30 இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்படவுள்ளன.
130-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவர். கோயிலின் சார்பில் 325 நிரந்தர மற்றும் 300 தற்காலிகக் கழிப்பறைகளும், நகராட்சி சார்பில் 9 நிரந்தரக் கழிப்பறைகளும் பயன்பாட்டுக்கு உள்ளன. கழிவுநீர் அகற்ற 3 சூப்பர் சக்கர் இயந்திரங்கள் தயாராக உள்ளன.
மருத்துவம் மற்றும் அவசர கால சேவைக்கு கோயில் நுழைவு வாயில், நாழி கிணறு மற்றும் கடற்கரைப் பகுதிகளில் 3 மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். நவம்பர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், நவம்பர் 12 முதல் 15 வரை 24 மணி நேரமும் இந்த முகாம்கள் இயங்கும். பக்தர்களுக்கு வழங்க 15 இடங்களில் ஓஆர்எஸ் மையங்கள் அமைக்கப்படும். அவசர சிகிச்சைக்கு 6 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன” என்று அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து, கோயிலின் கடற்கரை பகுதியை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் அருணாச்சலம், ஏடிஎஸ்பி திபு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரோஜாலி சுமதா, திருச்செந்தூர் கோட்டாட்சியர் கவுதம், டிஎஸ்பி மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
