விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் ‘LIK’ (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி மதுரை மற்றும் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.
இதனிடையே, நாளை ‘LIK’ படம் வெளியாவதையொட்டி இன்று அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மனைவியும் பிரபல நடிகையுமான நயன்தாராவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். சிறப்பு தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ரசிகர்களுடன் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘LIK’ படம் கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகும் என முதன் முதலில் கூறப்பட்டது. அதன்பின், செப்டம்பர் 18, அக்டோபர் 17, டிசம்பர் 18 என வெளியீட்டு தேதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில் படம் வெளியாகவில்லை. இதனிடையே நாளை ‘LIK’ வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
