திருப்பத்துார் தேர்தல் வழக்கு: வாபஸ் பெற அனுமதி கோரி பெரியகருப்பன் முறையீடு

– டில்லி சிறப்பு நிருபர் –

திருப்பத்துார் சட்டசபை தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தங்கள் மனுவை திரும்பப் பெற அனுமதி கோரி, திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்துார் தொகுதியில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை, தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதை எதிர்த்து பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க சீனிவாச சேதுபதிக்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பெரிய கருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, ”தேர்தல் வெற்றியை எதிர்த்து முதன்மை வழக்காக தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளது. எனவே, இடைக்கால உத்தரவு தொடர்பான இந்த மனுவை மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால், இதை திரும்ப பெற விரும்புகிறோம்,” என, கோரிக்கை வைத்தார்.

வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் முறைப்படி ஆஜராகி, இந்த கோரிக்கையை தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.

Source link