திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர், கடந்த 19-ம் தேதி தனது காரில் காவலூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, காவலூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மஞ்சுநாதனின் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லட்சுமணன் படுகாயமடைந்தார்.
இது குறித்து, காவலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மஞ்சுநாதனின் காரைப் பறிமுதல் செய்து, ஆலங்காயம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தனது காரை விடுவித்து தருமாறு மஞ்சுநாதன் ஆலங்காயம் காவல் நிலையத்தை அணுகினார்.
அப்போது, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ஆலங்காயம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் என்பவர், காரை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மஞ்சுநாதன், இதுபற்றி திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாரளித்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் மஞ்சுநாதன் ஆலங்காயம் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தபோது, அவரும் கை நீட்டி வாங்கினார்.
அப்போது, அங்கு மறைத்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், ராமகிருஷ்ணனைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவரிடம், தொடர்ந்து துறைரீதீயான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
