திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் நிலம்: பத்திரப்பதிவு செய்ய ஐகோர்ட் தடை

சென்னை: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 213 ஏக்கர் நிலத்தை, பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், நல்லுார் கிராமத்தில், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 218.41 ஏக்கர் நிலத்தை, ஆவணப் பதிவு செய்யக் கூடாது என, திருப்பூர் சார் பதிவாளருக்கு, கோவில் செயல் அலுவலர் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூரை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, கோவில் செயல் அலுவலர் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்து, சண்முகசுந்தரத்தின் நிலத்தை பதிவு செய்ய அனுமதித்து, 2024ம் ஆண்டு உத்தரவிட்டார். இதை எதிர்த்து, 2025ம் ஆண்டு கோவில் நிர்வாகம் சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், என்.மாலா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவில் நிர்வாகம் சார்பில், வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, ”ஓட்டுமொத்தமாக, கோவில் செயல் அலுவலர் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்தது ஏற்புடையதல்ல. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,” என்றார்.

இதை ஏற்ற நீதிபதிகள், கோவில் செயல் அலுவலர், மாவட்ட சார் பதிவாளருக்கு அனுப்பிய கடிதம் சட்டப்படி செல்லத்தக்கது. மேலும், 213 ஏக்கர் கோவில் நிலத்தை பத்திரப் பதிவு செய்யக் கூடாது. மீதமுள்ள 5 ஏக்கர் நிலத்தை மீட்க, சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, தேவையான நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள அனுமதித்து உத்தரவிட்டனர்.

Source link