திருமணம் முடிந்த மணப்பெண் ஒருவர், தனது கணவனின் வீட்டிற்கு சுமார் 3 மணி நேரம் நடந்தே சென்ற சம்பவம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, புல்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்பவருக்கும், உடாவா கிராமத்தைச் சேர்ந்த அனில் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சி பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் ’ஜோஜோட்’ எனும் பாரம்பரிய மரபின்படி நடைபெற்றது. இந்த வழக்கப்படி, மணமகள் தனது வீட்டிலிருந்து மணமகனின் வீடு வரை திருமண ஊர்வலத்தை முன்னின்று அழைத்துச் செல்ல வேண்டும்.
அதன்படி, இந்த திருமணம் நடந்து முடிந்ததையடுத்து, உடாவா கிராமத்திற்குச் செல்ல மணமகள் வீட்டார் தயாராகினர். இந்நிலையில், உடாவா கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லாததால், மணமகளும், அவரது உறவினர்களும் மணமகனின் வீட்டிற்கு நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மணமகனின் வீடு சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. கரடுமுரடான இந்த பாதையில் மணமகள் வீட்டார் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்தே சென்றனர்.
உத்தராகண்ட் மாநிலத்தின், டேராடூன் மாவட்டத்தின் சக்ராதா பகுதியில் உள்ள உடாவா கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளாகியும், அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தவிக்கும் கிராமங்களின் நிதர்சனமான நிலையை இந்த வீடியோ எடுத்துக்காட்டியுள்ளது. மணமகள் தனது திருமண நாளில் நடந்து சென்ற அதே பாதையைத்தான், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் உடல்நலக்குறைவு ஏற்படும்போதோ அல்லது சந்தையிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லும்போதோ அல்லது குழந்தைகள் படிக்கச் செல்லும் போதோ பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
இந்நிலையில், தன்னைப் போன்று மற்றவர்களுக்கும் இது போன்ற சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, உடாவா கிராமத்திற்குச் சாலை அமைத்துத் தருமாறு முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு, ஷர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார்.
