சென்னை:”தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கு, கவிஞர் கண்ணதாசனின் பெயரை சூட்ட வேண்டும்,” என, தமிழக அரசுக்கு, கண்ணதாசன் தமிழ்ச்சங்க தலைவர் சரஸ்வதி ராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின், 35வது ஆண்டு விழா மற்றும் கவிஞர் கண்ணதாசனின் நுாற்றாண்டு விழா, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் நேற்று நடந்தது.
பட்டிமன்றம்
அதில், கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம், செந்தமிழருவி தலைமையில், ‘கண்ணதாசனின் புகழுக்கு பெரிதும் காரணம் காதல் பாடல்களே – தத்துவப் பாடல்களே’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் போன்றவை நடந்தன.
அதைத்தொடர்ந்து, கண்ணதாசன் பாடல் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், சரஸ்வதி ராமநாதன் ஆகியோருக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், கண்ணதாசன் விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சரஸ்வதி ராமநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கில், அவர் பேசியதாவது:
கண்ணதாசன் குறித்து முதன்முதலில், முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்தேன்.
பாமரர்களும் உணரும் வகையில் பாட்டெழுதிய கண்ணதாசனை, படித்தவர்களும் ஏற்கும் வகையில், அந்த ஆய்வை செய்தேன். கம்பன் விழாக்கள் மற்றும் பட்டிமன்றங்களில், முதன்முதலில் நான் தான் கண்ணதாசன் பாடல்களை மேற்கோள் காட்டினேன்.
அப்போது, சினிமா பாடல்களை மேற்கோள் காட்டுவதா என்று, பலரும் விமர்சித்தனர். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பின், அவர்களே, கண்ணதாசன் பாடல்களை நிராகரிக்க முடியாத நிலைக்கு வந்தனர். கண்ணதாசன் அனைத்து நிலையில் உள்ளவருக்கும் பொதுவானவர்.
கவிஞர்களான பாரதியார், பாரதிதாசன் பெயர்கள், பல்கலைகளுக்கு சூட்டப்பட்டது போல, கண்ணதாசன் பெயரை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கு, தமிழக அரசு சூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆதாரமற்ற பேச்சு
கருத்தரங்கத்தில் பங்கேற்ற இயக்குநர் பிருந்தா சாரதி பேசுகையில், ”எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்ளிட்டோரின் நுாற்றாண்டை, அரசு விழாவாக கொண்டாடியது போல, கண்ணதாசன் நுாற்றாண்டு விழாவையும், தமிழக அரசு கொண்டாட வேண்டும்,” என்றார்.
திரைப்பட இயக்குநர் அகத்தியன் பேசுகையில், ”கண்ணதாசனிடம் உதவியாளராக சேர வேண்டும் என்பதற்காக, எம்.ஏ., தமிழ் இலக்கியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் உள்ளிட்டவற்றை படித்தேன்.
”அவரிடம் பேச மட்டுமே முடிந்ததால், இயக்குநர் பாலச்சந்தரிடம் உதவியாளராக சேர்ந்து, கண்ணதாசன் பாட்டெழுதுவதை காண முடிந்தது. அவரை பற்றி பலர் ஆதாரம் இல்லாமல் பேசுகின்றனர்,” என்றார்.
கருத்தரங்கில், கண்ணதாசனின் மகன்கள் கண்மணிசுப்பு, கண்ணதாசன் ராமசாமி, தமிழ்ச்சங்கங்களை சேர்ந்த புவனா வெங்கட், இந்திரா விஜயலட்சுமி, ஆன்மிகவாதிகளான திருமூலர் சத்யா, டான் ஸ்டோனி, நாகூர் கலீபா உள்ளிட்டோர், தங்களை பாதித்த கண்ணதாசனின் பாடல்கள் மற்றும் கவிதைகள் குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் விருதுகளை வழங்கினார். சங்க பொதுச் செயலர் காவிரி மைந்தன், நாகப்பன், வர.முருகன், கவிஞர்கள் விஜயகிருஷ்ணன், ஆதிரா முல்லை, உமா சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
