அதிக எம்.எல்.ஏ.க்களுக்கு ஆசைப்பட்டு சட்டசபை தேர்தலின் போது அணி மாறினால் தி.மு.க. கூட்டணி சிதறி போயிருக்கும் என்று திருமாவளவன் புதுச்சேரியில் தெரி வித்தார்.
புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சிசெயற்குழு கூட்டம் நேற்று இரவு கம்பன் கலையரங்கில் நடந்தது. மாநில முதன்மை செயலாளர் அரிமாத்தமிழன் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி. முன்னிலைவகித்தார். சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், நடந்து முடித்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வில் 60 பேர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தராதபோது விமர்சிக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 3 பேருக்கு போட்டியிட வாய்ப்பு தராததால் அவர்களை வெளியேற்றினால் கட்சி காணாமல் போய்விடும் என கருதினர். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 9 சதவீதம், நா.த.க. 4 சதவீதம், அ.தி.மு.க.,தி.மு.க. கடந்த தேர்தலை விட தொகுதிகள் குறைந்ததால் வாக்குகள் சரிந்தது.
சட்டசபை தேர்தலில் 57 இடங்களில் தி.மு.க. வெல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சியே முக்கிய காரணம். தி.மு.க. கூட்டணியில் இருந்து நம்மை வைத்து உடைக்க பார்த்தனர். ஆனால் அதற்கு இடம் தரவில்லை. மதசார்பற்ற கூட்டணி சிதறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். சராசரி அரசியல்வாதியாக நான் இருந்திருந்து அணி மாறினால், தேர்தலுக்கு முன்பே தி.மு.க. கூட்டணி சிதறி போயிருக்கும்.
விஜய் அழைத்த போதே சென்றிருந்தால் எம்.எல்.ஏ.க்கள் அதிகமாக இருப்பார்கள் என்பார்கள். தற்போது உள்ள எம்.எல்.ஏ. போதும். நான் எடுத்த முடிவு சரி. எங்கள் மீதான நம்பகத்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளது. அதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்தியாவுக்கே நீட் வேண்டாம் என தொடக்கம் முதல் பேசியது விடுதலை சிறுத்தைகள் கட்சி. காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்ட நிலையில் ஏன் பாரதீய ஜனதா அரசு தூக்கி எறிய வில்லை.
பல திட்டப்பெயர்களை மாற்றினார்கள். நீட் தேர்வு காங்கிரஸ் கொண்டு வந்தது என காங்கிரஸ் மீதி பழிபோடவோ, ரத்து செய்யவோ பாரதீய ஜனதா முன் வராதது ஏன்?, நீட் தேர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பாபு ராஜேந்திரன்
