தி.மு.க-வை வழிநடத்தும் தகுதி… இப்படி ஒரு வாக்கெடுப்பு நடத்த உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா? நிர்மல் குமார் கேள்வி

திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட்டை சீரமைக்கக் கோரி இளைஞர்கள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், ஒரு சிலர் நீட் வேண்டாம் எனப் போராடுவதாகவும், இதில் திமுக தேவையற்ற முறையில் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

உதயநிதிக்கு யாரோ தவறான ஆலோசனைகளை வழங்கி அவரைத் தவறாக வழிநடத்துவதாகவும், ‘ஜென்சி’ (Gen Z) என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கும் உதயநிதிக்கு அதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், ஜென்சி திமுக டி-சர்ட் அணிவித்து, 200, 300 ரூபாய் கொடுத்து மக்களைப் போராட்டத்தில் உட்கார வைத்துள்ளதாகக் கூறிய அவர், உதயநிதி இதுபோன்ற கோமாளித்தனமான விஷயங்களை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தன்னுடைய தகுதியை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார். அவருடைய தந்தை ஸ்டாலின் தன் ஆட்சியில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறிச் சென்றதாகவும், அதே சந்தேகத்தில்தான் உதயநிதியும் இருக்கிறார் என்றும் விமர்சித்தார். உதயநிதியின் பெண் டீம் அவரை நடுரோட்டில் விட்டுவிட்டதாகக் கூறிய அவர், கட்சியை நடத்தத் தகுதி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள திமுகவின் ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகளை அழைத்து வாக்கெடுப்பு நடத்தி சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

மேலும், அண்ணா தொடங்கிய திமுகவை வழிநடத்த கனிமொழி மற்றும் உதயநிதி ஆகிய இருவரில் யாருக்குத் தகுதி இருக்கிறது என்பதையும் வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க வேண்டும் என்றும், 65 வயது வரை இளைஞரணித் தலைவராக இருந்த ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் தங்களது தகுதியை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உணர்வுப்பூர்வமாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் வெற்றி காரணமாகவே மத்திய அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார் என்றும், ஆனால் திமுகவினர் இந்தப் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகவும் குற்றம் சாட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு அகற்றப்பட வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், இந்த போராட்டங்களில் தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றபோதிலும் எந்தவிதக் கட்சி கொடியோ, பேனரோ பயன்படுத்தப்படவில்லை என்றார். போராட்டக் குழுவினரின் அழைப்பின் பேரிலேயே அமைச்சர் ராஜ்மோகன் நேற்று ஆறுதல் கூற அங்கு சென்றதாகவும் கூறினார். ஸ்டாலின் தன்னை ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மகன்’ எனத் திரும்பத் திரும்பக் கூறுவது எடுபடவில்லை என்றும், பொதுவெளியில் கோமாளித்தனமாகச் செயல்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், தமிழக மக்களுக்காக 100 சதவீதம் முழு அர்ப்பணிப்போடு சட்டரீதியாகவும் நேரடிப் பேச்சுவார்த்தை மூலமாகவும் தீர்வுகாண ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேகதாது குறித்தோ அல்லது 1970 மற்றும் 1992-ஆம் ஆண்டுகளில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நீக்கப்பட்ட முக்கிய சரத்துகள் குறித்தோ ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் எதுவும் தெரியாது என்றும், யாரோ கொடுக்கும் அறிக்கையை மட்டுமே உதயநிதி படிக்கிறார் என்றும் சாடினார். ராமதாஸ் மிக மூத்தவர் என்பதால் அவருடைய தனிப்பட்ட விஷயங்களுக்குக் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்றும், முதலமைச்சரின் கர்நாடகப் பயணம் குறித்து முதலமைச்சர் அலுவலகமே பதில் அளிக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கலரில் பேருந்துகளை இயக்குவது நோக்கமில்லை என்றும், மக்களுக்கு நன்மை தரும் காரியங்களையே செய்யக் காத்திருப்பதாகவும் கூறினார். கட்சியின் பெயர் மற்றும் விசில் சின்னம் ஒரு நொடியில் உலகம் முழுவதும் சென்றடைந்துவிட்டது என்றும், சின்னத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் தெரிவித்தார். இறுதியாக, ஆர்.பி. உதயகுமாரின் சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சீட்டாாட்ட கிளப்புகளில் பணக்காரர்கள் பொழுதுபோக்கிற்காகப் பேசுவதைப் போல அவர் பேசி வருவதாகவும், அவரை அதிமுகவினரே மறந்து அடுத்த தலைமுறைக்குச் சென்றுவிட்டதால் அவரைப் பற்றிப் பேசி மிகைப்படுத்த வேண்டியதில்லை என்றும் கூறிப் பேட்டியை நிறைவு செய்தார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Source link