தீபாவளிக்கு முன் ரூ.2000: பி.எம் கிசான் 24வது தவணைத் தொகை வெளியாகும் தேதி அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பி.எம் கிசான் (PM-KISAN) திட்டத்தின் கீழ் முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் 24-வது தவணைத் தொகை 2026 அக்டோபர் 30 அன்று விடுவிக்கப்பட உள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.2,000 நேரடியாகச் செலுத்தப்படும். இத்தகவல் திட்டத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவணைத் தொகை விடுவிக்கப்படுவதற்கு முன்பாக, விவசாயிகள் தங்கள் பயனாளிகளின் நிலை (Beneficiary Status) மற்றும் தேவையான நடைமுறைகளைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இ-கே.ஒய்..சி (e-KYC) நிலுவை, வங்கிக் கணக்கு விவரங்களில் உள்ள குளறுபடிகள் அல்லது நிலப் பதிவேடு சரிபார்ப்பில் உள்ள தவறுகள் காரணமாகப் பணம் வழங்குவது தடைபடக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

ஆங்கிலத்தில் வாசிக்க

ஒவ்வொரு தகுதியுள்ள விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 உதவி

பி.எம். கிசான் திட்டம் மத்திய அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகும். விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்தொகை தலா ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.

2018-இல் தொடங்கப்பட்டு 2019 முதல் செயல்பாட்டுக்கு வந்த இத்திட்டத்தின் கீழ், 24-வது தவணையாக 9.34 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.18,680 கோடி வழங்கப்படவுள்ளது.

மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் பிஎம் கிசான் திட்டத்தை 2026-27 முதல் 2030-31 நிதியாண்டு வரை தொடர்ந்து செயல்படுத்த ரூ.3.15 லட்சம் கோடி நிதியை ஒதுக்கி ஒப்புதல் அளித்தது. 2026 ஜூன் வரை, 23 தவணைகள் மூலமாக விவசாயிகளுக்கு ரூ.4.47 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது

தவணைத் தொகையைப் பெறத் தேவையான தகுதிகள்

அடுத்த தவணைத் தொகையைப் பெறுவதற்கு முன் விவசாயிகள் பின்வரும் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்:

பி.எம் கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இ-கேஒய்சி  கட்டாயமாகும். விவசாயிகள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஒ.டி.பி அடிப்படையிலோ அல்லது அருகிலுள்ள பொது சேவை மையங்கள் (CSC) மூலம் பயோமெட்ரிக் முறையிலோ இதைச் செய்து முடிக்கலாம்.

வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு, நேரடிப் பலன் பரிமாற்றத்திற்குப் (DBT) தகுதியானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் நிலச் சரிபார்ப்பு (Land Seeding) நிலை சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

பி.எம் கிசான் 24-வது தவணை நிலையைச் சரிபார்ப்பது எப்படி?

விவசாயிகள் தங்கள் பயனாளிகளின் நிலையை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வீட்டிலிருந்தபடியே சரிபார்க்கலாம்:

அதிகாரப்பூர்வ பி.எம். கிசான் இணையதளத்திற்குச் செல்லவும்.

ஃபார்மர்ஸ் கார்னர் (Farmers Corner) பகுதிக்குச் செல்லவும்.

Know Your Status அல்லது பெனிஃபிஷியரி ஸ்டேட்டஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் பதிவு எண் (Registration Number) மற்றும் கேப்சா குறியீட்டை (Captcha) உள்ளிட்டு, தேவைப்பட்டால் ஒ.டி.பி சரிபார்ப்பை பூர்த்தி செய்யவும்.   

திரையில் தோன்றும் விவரங்கள் மூலம் உங்கள் தவணைத் தொகை மற்றும் தகுதி நிலையை அறிந்துகொள்ளலாம்.

அக்டோபர் 30 அன்று தவணைத் தொகை விடுவிக்கப்பட்டாலும், தகுதி மற்றும் சரிபார்ப்பு முழுமையாக முடிந்த விவசாயிகளுக்கு மட்டுமே பணம் கணக்கில் சேரும் என்பதால், முன்கூட்டியே நிலையைச் சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும்.

Source link