தீபாவளி பண்டிகை : மகிழ்ச்சி செய்தி சொன்ன தமிழக அரசு!

வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி (08.11.2026 – ஞாயிற்றுக்கிழமை) அன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமை (09.11.2026) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “இந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடிவிட்டு திரும்புவதற்கு ஏதுவாக, அதற்கு அடுத்த நாளான நவம்பர் 9ஆம் தேதி ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தன. இந்தக் கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்தது.

அதன்படி, நவம்பர் 9ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நவம்பர் 28-ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாளானது செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.