நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிட்டன. தொடர்ந்து பயணிகள் பலரும் முன்பதிவிற்கு ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஒருபுறம் ஏமாற்றம் நிலவி வரும் சூழலில் மறுபுறம் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியுள்ளது.
நவம்பர் 8 ஞாயிறு அன்று நடப்பாண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வார நாட்களில் வந்திருந்தால் கூடுதலாக விடுமுறை கிடைத்திருக்கும். இந்த விஷயத்தை பொறுத்தவரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வரை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர் பயணம் மேற்கொள்ள பலரும் திட்டமிட்டுள்ளனர். இவர்கள் பேருந்து மற்றும் ரயில்களில் தற்போதே டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ரயில்களில் இரண்டு மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும். அந்த வகையில் தீபாவளிக்கு முன்கூட்டியே ஊருக்கு செல்வோருக்கு வசதியாக நவம்பர் 5ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. ஆனால் சில நிமிடங்களில் பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டன. இதற்கிடையில் லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சி செய்து வருவதால் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியுள்ளது. எந்த ஒரு ரயிலை எடுத்து கொண்டாலும் டிக்கெட் இல்லை, முன்பதிவு செய்ய முடியாது என்றே பதில் கிடைக்கிறது. இந்த தொழில்நுட்ப பிரச்சினை அடுத்த சில நிமிடங்களில் சரிசெய்யப்பட்டு விடும் எனக் கூறப்படுகிறது.
Source link
